காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீது தாக்குதலை மேற்கொள்ள சென்றவர்களை தடுக்க வேண்டாம் என, காவற்துறை மா அதிபரும், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் செயலாளரும் கட்டளை பிறப்பித்ததாக குறிப்பிடப்படுவது முற்றிலும் உண்மை என முன்னாள் அமைச்சர் ரமேஷ் பத்திரண சபையில் சுட்டிக்காட்டியதாக, ‘வீரகேசரி’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
நாட்டில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் மற்றும் சொத்துக்களுக்கு ஏற்பட்டுள்ள சேதம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற ஒத்திவைப்பு விவாதத்தின் போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பதவி விலகுவதை அறிவிப்பதாக குறிப்பிட்டதை தொடர்ந்து அவரை வழியனுப்பி வைப்பதற்காகவே நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆதரவாளர்கள் அலரி மாளிகைக்கு அழைத்து வரப்பட்டனர்.
கூட்டம் நிறைவடைந்தபோது சில கீழ்த்தரமான அரசியல்வாதிகள் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களிடம் காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீது தாக்குதலை மேற்கொள்ளுமாறு அழுத்தம் பிரயோகித்ததை கவலையுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இவர்களின் அழுத்தம் மற்றும் தூண்டுதலை தொடர்ந்தே ஒருசிலர் தாக்குதலை நடத்த காலி முகத்திடல் நோக்கி சென்றார்கள்.
அலரி மாளிகைக்கு வந்த ஆளும் தரப்பு ஆதரவாளர்கள் தாக்குதலை நடத்த காலி முகத்திடல் நோக்கி செல்லும்போது நான் அலரி மாளிகையில் இருந்தேன். அவர்களை தடுக்குமாறு அறிவுறுத்தினேன். எவ்வித பிரச்னையும் இல்லை, வீதித்தடைகள் போடப்பட்டுள்ளதாக அவர் என்னிடம் தெரிவித்தார். நான் ஜனாதிபதியிடம் நேரடியாகவே இதுதொடர்பாக உரையாடினேன்.
காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ள சென்ற குண்டர்களை தடுக்க வேண்டாம் என காற்துறை மா அதிபர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் செயலாளர் குறிப்பிட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் குறிப்பிட்டுள்ளது முற்றிலும் உண்மை” என அவர் தெரிவித்ததாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.