ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் கட்சியின் தீர்மானத்திற்கு முரணாகவே அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்றுள்ளனர் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
அமைச்சு பதவிகளை பொறுப்பேற்காமல் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கவே கட்சி செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது எனவும் அவர் நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது தெரிவித்தார்.
தற்போது மக்கள் மத்தியில் பெரும் அச்சுறுத்தல் நிலைமை ஏற்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு மற்றும் உணவு தட்டுப்பாடு குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சமூக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாண சகல தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
நாடாளுமன்றம் சிறந்ததா அல்லது மோசமானதா என்பது தொடர்பில் இதுவரை கேள்விக்குறியாகியுள்ள நிலையிலேயே உள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒழுக்கமான முறையில் மக்கள் பிரச்சினைகள் தொடர்பில் சபையில் ஒன்று கூடுவதற்கு முடியாத நிலைமையே இதுவரை காணப்படுகிறது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.