அதிபர் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் என அனைவரும் “போகமாட்டோம் பாடசாலைக்கு” என்ற கோசத்தோடு வீதியில் இறங்கும் நிலை ஏற்படுமென இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சரா புவனேஸ்வரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிற்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சரா புவனேஸ்வரன் மீண்டும் இன்றைய தினம் அனுப்பியுள்ள கடிதத்திலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்கடிதத்தில்,இன்று பாடசாலைகள் ஆரம்பிக்கபட்டுள்ள நிலையில்,
போக்குவரத்து சீரில்லை. மாணவரின் போசணைக்கு வழியில்லை, ஆசிரியர்களின் பயணத்திற்கு மார்க்கமில்லை. இதற்கு மேலதிகமாக இன்னும் பல கஷ்டங்கள். இவை எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு பாடசாலைகளை நடாத்தி மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை முறையாக முன்னெடுக்க இன்றைய காலத்திற்குப் பொருத்தமான இலகுவான பொறிமுறைகளை முன்வைத்தோம்.
ஆசிரியர்களை சுழற்சி முறையில் அழைத்தல். பாட நேரங்களை அதிகரித்தல், ஆரம்ப வகுப்புக்களுக்கு சுழற்சி முறையில் நாட்களைத் தெரிவு செய்தல், மாணவர்களை கிரமமாகப் பாடசாலைக்கு வரவழைக்க மதியபோசனம் வழங்குதல், தூர இடங்களுக்கு கடமைக்குச் செல்லும் ஆசிரியர்களுக்கு பயணச் செலவில் அரைவாசியை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளல் போன்றவற்றை உடனடியாக நடைமுறைப்படுத்தாவிட்டால் எல்லோரின் மனநிலையிலும் விரக்தி ஏற்பட்டு இளையோர் வீதியில் இறங்கியதுபோன்று அதிபர் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் என அனைவரும் “போகமாட்டோம் பாடசாலைக்கு” என்ற கோசத்தோடு வீதியில் இறங்கும் நிலை ஏற்படும் என்பதனைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என்றுள்ளது.