தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்ராலின் இந்தியாவின் தமிழ் நாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரிவேல்த் குளோபல் நிதி நிறுவன மோசடியாளர்களை நாடு கடத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ப்ரிவெல்த் குளோபல் நிதி நிறுவனத்தினால் பாதிக்கப்பட்ட அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பிரிவேல்த் குளோபல் நிதி நிறுவனத்தில் நிதி மோசடி தொடர்பாக இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாடு கல்முனை தனியார் மண்டபத்தில் திங்கட்கிழமை (6.06.22) மாலை இடம்பெற்ற போது பாதிக்கப்பட்டவர்கள் மேற்கண்டவாறு கூறினர்.
மேலும் கருத்து தெரிவித்ததாவது.
தமிழ் நாட்டிலும் தமிழ் நாட்டிற்கு வெளியிலும் எமக்காக குரல் கொடுத்து கொண்டிருக்கின்ற தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களே எமது நாட்டில் தமிழ் பேசும் மாகாணமான கிழக்கு மாகாணத்தில் பிரிவேல்த் குளோபல் நிதி நிறுவனம் என்ற பெயரில் 200 கோடி ரூபாவினை மோசடி செய்து கடல் மார்க்கமாக சட்டவிசோதமாக உங்கள் நாட்டிற்கு தப்பி ஓடிவந்து தற்போது திருச்சி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள சிஹாப் சரீப் மற்றும் அவரது மனைவி பர்சானா மார்க்கார் இருவரும் தற்போது சிறையில் உள்ளார்கள்.
இவர்களது விசாரணைகள் அனைத்தும் அங்கு நிறைவு பெற்றிருப்பதாக நாம் அறிகின்றோம்.இதற்கு காரணம் இந்தியா தமிழ் நாட்டுடன் நாம் நெருங்கிய தொடர்புகளை வைத்துள்ளோம்.மேலும் 1400 குடும்பங்கள் இவர்களது நிதி நிறுவனத்தில் பண வைப்பு செய்து ஏமாற்றப்பட்டவர்கள்.தற்போது எமது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் மிக சிரமங்களை நாம் எதிர்கொள்கின்றோம்.
அத்துடன் பொருளாதார நெருக்கடியான இக்கட்டான சூழலில் எமது நாட்டிற்கு பல்வேறு உதவிகள் செய்து எமது மனங்களில் தற்போது இடம்பிடித்துள்ளீர்கள்.எனவே சர்வேதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த நிறுவனத்தின் மோசடியாளர்களை உங்கள் நாட்டில் தடுத்து வைத்துள்ளார்கள்.எனவே இவர்களை எமது நாட்டிற்கு நாடு கடத்தி எமது 1400 குடும்பங்களின் கண்ணீரை துடையுங்கள் என கோரிக்கை விடுக்கின்றோம் என குறிப்பிட்டனர்.
நாட்டின் சில பகுதிகளில் இயங்கி வந்த குறித்த நிதி நிறுவனம் கடந்த 06 வருடங்களாக கிழக்கு மாகாணம் உள்ளடங்களாக கிளைகளை ஆரம்பித்து இஸ்லாத்தை முன்னிறுத்தி சில மௌலவிகளின் ஆசிர்வாதத்துடன் எமது மக்களை பகடைக்காய்களாக்கி ஏமாற்றியுள்ள இந்நிறுவனத்தின் கிளையில் பண வைப்பு செய்தவர்கள் சுமார் 1400 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மேற்குறித்த விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ப்ரிவெல்த் குளோபல் நிதி நிறுவனத்தினால் பாதிக்கப்பட்ட அமைப்பினை சேர்ந்த தலைவர் ஏ.றிஸ்வாட் செயலாளர் ஏ.றஸாக் உப தலைவர் ஐ.எம். பர்ஸாத் பொருலாளர் எம்.ஐ.எம் வகீல் ஆகியோர் குறிப்பிட்டனர்.
மேலும் இவ்விடயம் குறித்து ஜனாதிபதி அடங்கலாக அரசின் முக்கியஸ்தர்கள் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் வேண்டுகோள் விடுத்தனர்.