யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் இருந்து இராணுவ நடவடிக்கையால் மக்கள் வெளியேற்றப்பட்டு 32ஆம் ஆண்டு நிறைவை ஒட்டி தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தில் இன்றைய தினம் புதன்கிழமை விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.
யுத்தம் முடிவடைந்த பின்னர் வலி.வடக்கு பிரதேசங்களில் சில பகுதிகள் விடுவிக்கப்பட்ட போதிலும் , இன்னமும் பல பகுதிகள் கடற்படை , இராணுவம் மற்றும் விமான படை ஆகிய முப்படைகளின் கட்டுப்பாட்டில் காணப்படுகின்றன.
குறித்த பகுதிகளில் முப்படையினரும் பாரிய முகாம்களை அமைத்து , உயர் பாதுகாப்பு வலயங்களாக அவற்றை பிரகடனப்படுத்தியுள்ளனர்.
உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள தனியார் காணிகளை நிரந்தமாக தமது முகாமுக்காக சுவீகரிப்பதற்கான நடவடிக்கைகளை முப்படையினரும் முன்னெடுத்து வரும் நிலையில் மக்கள் தொடர்ந்தும் தமது எதிர்ப்பை வெளிக்காட்டி வருகின்றனர்.
அதேவேளை கடந்த 32 வருடங்களுக்கு முன்னர் இராணுவ நடவடிக்கையால் தமது சொந்த இடங்களை விட்டு இடம்பெயர்ந்த பெரும்பாலான குடும்பங்கள் தற்போதும் , தமது சொந்த இடங்களுக்கு திரும்ப முடியாத நிலையில் உறவினர் வீடுகள் , வாடகை வீடுகள் என்பவற்றில் தங்கியுள்ளனர்.
இந்நிலையிலையே நேற்றைய தினம் (16.06.22) , தமது காணிகளை விட்டு முப்படையினரும் வெளியேற வேண்டும் எனவும் , தாம் தமது சொந்த இடங்களுக்கு செல்ல வேண்டும் என துர்க்கை அம்மனை சிதறு தேங்காய் உடைத்து வழிப்பட்டனர்.