இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ள நிலையில் மக்கள் இலங்கையில் இருந்து சட்ட விரோதமான முறையில் தமிழகத்திற்கு செல்லும் நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.
இந்த நிலையில் தனுஷ்கோடி அடுத்த ஒன்றாம் தீடை பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (17.06.22) இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த ஒரு ஆண், இரண்டு பெண், 4 குழந்தை உட்பட 7 பேர் தஞ்சம் அடைந்துள்ளனர்.
தீடை பகுதியில் இலங்கை தமிழர்கள் அகதிகளாக வந்து தஞ்சம் அடைந்துள்ளதாக மரைன் காவற்துறையினர் கிடைத்த தகவல் அடிப்படையில் விரைந்து சென்ற காவற்துறையினர் அவர்களை மீட்டு விசாரணைக்காக மண்டபம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
இதையடுத்து விசாரணை முடிந்த பின்னர் மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் அவரது தங்க வைக்கப்பட உள்ளனர்.
இவ்வாறு தஞ்சமடைந் துள்ளவர்கள் வவுனியா மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 2 குடும்பங்களை சேர்ந்த 7 பேர் என தெரிய வந்துள்ளது.
பாடசாலைகளைத் தொடர்ந்து இயக்க முடியாது – இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் தெரிவிப்பு
தற்போதுள்ள சூழ்நிலையில் பாடசாலைகளை தொடர்ந்தும் இயக்குவது கேள்விக்குறியாக உள்ளது. இதனை அரசாங்கம் உணராமல் இருப்பது வேதனையாக உள்ளதென இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேய இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில்,
இன்றைய மோசமான நிலைமை இலங்கையில் ஒருபோதும் ஏற்பட்டதில்லை. சகல பொருட்களின் விலைகளும் அதிகரித்தே செல்கின்றன. ஆனாலும் அப்பொருட்களைப் பெறமுடியாமல் உள்ளது. அதன் காரணமாக சகல துறைகளுமே ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பாடசாலை என்பது மாணவரை மையப்படுத்திய நிறுவனமாகும். மாணவர் துயரப்பட்டு பாடசாலைக்கு வந்து கற்கமுடியாது. அவர்களுக்கு கல்வியூட்டும் கல்வியியலாளர்கள் குடும்பங்களோடு இணைந்தவர்கள். அவர்கள் ஏனைய மக்களைப் போன்று பல்வேறு சிரமங்களையும் சுமந்தவர்களாக உள்ளனர். அவை எவற்றையும் பொருட்படுத்தாமல் பணியை தர்மமாகக் கருதி பணியாற்றும் அவர்கள் கடமைக்கே செல்லமுடியாது தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து மார்க்கங்கள் எதுவுமே சீராக இல்லை. தாமாகச் செல்வதற்கும் வழியில்லை.
இந்த நிலையில் பாடசாலைகளை தொடர்ந்து இயக்க முடியாது. என்பதனை அரசாங்கம் இன்னும் புரிந்து கொள்ளவில்லை. மீண்டும் தோற்றுப்போன இணையவழி முறையை அரசாங்கம் புகுத்தி நாட்டில் உள்ள அரைவாசிக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இன்னும் சுமையை ஏற்படுத்தப்போகின்றது.
ஆகையால் நாம் முன்வைத்த மாணவர், ஆசிரியர்களுக்கான போக்குவரத்து மார்க்கங்களை இலவசமாக்குவதே பாடசாலைகளை தொடர்ந்தும் இயக்க ஒரேவழி. இதைவிட தொடர்ச்சியாக வரவழைப்பதைத் தவிர்த்து சுழற்சிமுறையை பயன்படுத்த வேண்டும் என கல்வி அமைச்சிடம் தெரிவித்துள்ளோம் என்றுள்ளது.