Home இலங்கை குருந்தூர் மலையும் காலிமுகத் திடலும் – நிலாந்தன்.

குருந்தூர் மலையும் காலிமுகத் திடலும் – நிலாந்தன்.

by admin

நாட்டில் பொருளாதார நெருக்கடி என்ற ஒன்று உண்டா என்று ஐயப்படும் அளவுக்கு திருவிழாக்களும் கொண்டாட்டங்களும் விமரிசையாக நடக்கின்றன. ஆயிரக்கணக்கானவர்கள் திருவிழாக்களில் கூடுகிறார்கள். நூற்றுக்கணக்கானவர்கள் கொண்டாட்டங்களில் கூடுகிறார்கள்.வல்லிபுர ஆழ்வார் கோவில், பாசையூர் அந்தோணியார் கோவில், வற்றாப்பளை அம்மன் கோயில் போன்றவற்றில் திருவிழாக்கள் அமோகமாக நடந்தன. இக்கட்டுரை எழுதப்படும் நாளில் கண்டியில் கிரிக்கெட் கொண்டாட்டம் நடந்து கொண்டிருக்கிறது.திருவிழாக்கள் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளும் சனங்கள் அணியும் ஆடைகள்,எடுப்புச் சாய்ப்பு எதிலுமே பொருளாதார நெருக்கடியைக்  காணமுடியவில்லை.

ஆனால் யாழ் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் ஒருவர் கூறினார் 12 மாணவர்களைக் கொண்ட ஒரு வகுப்பில் 11 பேருக்கு உணவுத் தட்டுப்பாடு இருப்பதாக.அவர்கள் ஒரு வேளை அல்லது இரு வேளை உணவையே உட்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார். இம்மாணவர்கள் பெருமளவுக்கு கிழக்கு, மலையகம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் சொன்னார். எனவே மாணவர்களுக்கு உணவு கொடுக்கும் விதத்தில் “கொம்யூனிட்டி  கிச்சின்களை” உருவாக்கியிருப்பதாகவும்அவர் தெரிவித்தார்.

அவ்வாறான சமூகப்பொதுச் சமையலறைகளை குறித்து ஏற்கனவே மனோகணேசன் பேசிவருகிறார்.நகர்ப்புறத் தொடர்மாடிக்  குடியிருப்பாளர்களுக்கு அவ்வாறு பொதுச் சமையல் அறைகளை உருவாக்க வேண்டும் என்று அவர் கேட்டிருந்தார்.கடந்தகிழமை அக்கரைப்பற்றில் அவ்வாறான முயற்சிகளை சில முஸ்லீம் நண்பர்கள் முன்னெடுத்திருக்கிறார்கள்.“ வீட்டிலிருந்து ஒரு பார்சல் ”என்ற பெயரில் அது மருதமுனை,சாய்ந்தமருது,மாளிகைக்காடு,கல்முனைக்குடி,பாலமுனை போன்ற கிராமங்களுக்கு  வேகமாகப் பரவுவதாகக் கூறப்படுகிறது.

அதாவது சமூகப் பொதுச்சமையலறை மூலம் உணவூட்டப்பட வேண்டிய ஒரு தொகுதியினர் உருவாகி வருகிறார்கள் என்று பொருள்.இதை இன்னும் கூர்மையாகச் சொன்னால் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்க முன்பிருந்ததைவிடவும் நிலைமை பாரதூரமானதாக மாறிவருகிறது என்று பொருள்.அவர் பதவியேற்க முன்பிருந்ததை விடவும் இப்பொழுது எரிபொருளுக்கான வரிசைகள் அதிகரித்த அளவிலும் மிக நீண்ட வகைகளாகக் காணப்படுகின்றன. கடந்த 16 ஆம் திகதி வியாழக்கிழமை எரிபொருளுக்காக யாழ்ப்பாணத்தில் பல கிலோ மீட்டர் நீளமான வரிசைகள் காணப்பட்டன. யாழ்ப்பாணத்தின் நவீன வரலாற்றில் இவ்வாறான மிக நீண்ட வரிசைகள் காணப்பட்ட ஒரு நாள் அது.எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக சிலர் சைக்கிள்களை வாடகைக்கு எடுத்து அதில் வேலைக்கு வருகிறார்கள்.ஒரு நாளைக்கு சைக்கிள் வாடகை 150 ரூபாய்.

ஆனால் நாட்டின் பிரதமரும் அமைச்சர்களும் குறிசொல்வோராக மாறி விடடார்கள் என்று கடந்த வியாழக்கிழமை ஐலன்ட் பத்திரிகை தனது ஆசிரியர் தலையங்கத்தில் விமர்சித்திருந்தது.பிரதமர்,அமைச்சர்கள்,எதிர்க்கட்சித் தலைவர் உட்பட எனைய அரசியல்வாதிகளை, அந்த ஆசிரியர் தலையங்கம் ஞானா அக்காவின் மச்சான்கள் என்று வர்ணித்திருந்தது.

அதாவது கோட்டா கோகம,மைனா கோகம,ஹிரு கோ கம போன்ற போராட்ட கிராமங்கள் உருவாக்கப்படுவதற்கு காரணமாக இருந்த பொருளாதார நெருக்கடிகளை இப்பொழுது மேலும் தீவிரமாகியிருக்கின்றன.இப்படிப் பார்த்தால் இப்பொழுதுதான் போராட்டமும் அதிகரிக்கவேண்டும். ஒன்றல்ல பல கிராமங்களை நாடு முழுவதும்  உருவாக்க வேண்டும். ஆனால் இருக்கின்ற கோட்டா கோகம கிராமமும் தற்பொழுது சோர்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்பு ஒவ்வொரு நாளும் பிற்பகலில் அக்கிராமத்தை நோக்கி ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டு வந்தார்கள்.இப்பொழுது அவ்வாறான திரட்சி காணப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.ரணில் விக்ரமசிங்க பிரதமராக தெரிவு செய்யப்பட்ட பின் நிகழ்ந்த மாற்றங்களில் அதுவும் ஒன்று. போராட்டக் கிராமங்கள் சோரத் தொடங்கி விட்டன என்பது.

அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த முன்னிலை சோசலிசக் கட்சியின் பொதுச்செயலர் குமார் குணரட்னம் அதை ஏற்றுக் கொண்டார். கோட்டா கோகம கிராமத்தில் வினைத்திறனோடு செயற்படும் பல்வேறு அமைப்புக்கள் மத்தியில் முன்னிலை சோசலிசக் கட்சியின் மாணவர் அமைப்பும் காணப்படுகிறது. போராட்டத்தில் எழுச்சியும் வீழ்ச்சியும் உண்டு என்று குமார் குணரட்னம் கூறுகிறார்.

அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் சோரத் தொடங்கியதற்கு பல்வேறு காரணங்களைக் கூறலாம். அவற்றுள் முக்கியமானவை வருமாறு.

முதலாவது காரணம் ரணில் விக்கிரமசிங்கவின் வருகை.அவர் பிரதமராக நியமிக்கப்பட்டதோடு நடுத்தர வர்க்கத்தின் மத்தியில் ஒப்பீட்டளவில் நம்பிக்கைகள் அதிகரித்துள்ளன.தென்னிலங்கையில் படித்த நகர்ப்புற நடுத்தர வர்க்கம் எனப்படுவது பெருமளவுக்கு யு.என்.பிக்கு ஆதரவானது.அதில் ஒரு சிறு பகுதி ஜேவிபியினால் ஈர்க்கப்படுகிறது. அரசாங்கத்துக்கு எதிரான போராட்டக் கிராமங்களுக்கு மேற்படி நகர்ப்புற படித்த,நடுத்தர வர்க்கத்தின் ஆசீர்வாதம் அதிகளவு உண்டு என்று குமார் குணரட்னம் கூறுகிறார். ரணில் பிரதமராக நியமிக்கப்பட்ட பின் மேற்படி நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் போராட்டத்துக்கான உத்வேகம் குறைந்து வருவதாக அவதானிக்கப்பட்டுள்ளது. இது ஒரு காரணம்.

இரண்டாவது காரணம்.அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களை ஒருங்கிணைத்து தலைமை தாங்கவல்ல பலமான கட்டமைப்புக்கள் எவையும் அங்கே கிடையாது. ஒரு சித்தாந்த அடித்தளத்தின் மீது கட்டியெழுப்பப்பட்ட அமைப்போ கட்சியோ அங்கு இல்லை. போராட்டக்களத்தில் காணப்படும் அமைப்புக்கள் மற்றும் தனிப்பட்ட செயற்பாட்டாளர்கள் தங்களுக்கிடையே இறுக்கம் குறைந்த இணைப்புகளை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். அரசாங்கத்துக்கு எதிரானவர்கள் என்ற ஒரு ஒற்றைப் புள்ளியில் அவர்கள் பிணைக்கப்பட்டிருக்கிறார்கள்.ஆனால் அந்தப்பிணைப்பு மேலிருந்து கீழ்நோக்கிய ஒரு மையத்திலிருந்து நிர்வகிக்கப்படுகின்ற, ஒரு தலைமைத்துவத்துக்கு கீழ்ப்பட்ட பிணைப்பு அல்ல.மாறாக பக்கவாட்டில் ஒருவர் மற்றவரோடு கொள்ளும் சுயாதீனமான  பிணைப்புக்கள். இவ்வாறு பலமான தலைமைத்துவமோ அல்லது பலமான நிறுவனக் கட்டமைப்போ இல்லாத ஒரு பின்னணியில் இதுபோன்ற போராட்டங்கள் காலப்போக்கில் சோர்ந்து போகும் ஆபத்து உண்டு. இது இரண்டாவது காரணம்.

மூன்றாவது காரணம்.சனங்கள் நெருக்கடிகளுக்கு இசைவாக்கம் அடைந்து வருவது. நெருக்கடியின் தொடக்க காலத்தில் அவர்களுக்கு அது பாரதூரமாகத் தெரிந்தது.ஆனால் இப்பொழுது அது அவர்களுக்கு பழக்கப்பட்ட ஒன்றாக மாறிவிட்டது.இயல்பின்மையே இயல்பானதாக மாறிவிட்டது. இதுதான் யுத்த காலத்தில் தமிழ் மக்களுக்கும் நடந்தது. ஏன் ஆயுத மோதல்களுக்கு பின்னரான காலங்களிலும் அதுதானே நிலைமை?அந்தக் கூட்டு அனுபவம்தான் பின் வந்த வைரஸ் பிரச்சினை,இப்பொழுதுள்ள பொருளாதாரப் பிரச்சனை போன்றவற்றை தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பொழுதும் அவர்களுக்கு உதவுகின்றது. இப்பொழுது தமிழ் மக்களைப் போலவே சிங்கள மக்களும் நெருக்கடிகளுக்கு பழக்கப்பட்டு வருகிறார்களா?அதனால்தான் போராட்டத்தின் தீவிரம் குறைந்து வருகிறதா?

நாலாவது காரணம், மக்கள் எரிபொருளுக்கும் எரிவாயுவுக்குமாக நீண்ட நேரம் மிக நீண்ட வரிசைகளில் காத்துக் கிடக்கிறார்கள். தமது வயிற்றுப்பாட்டுக்காக இவ்வாறு நீண்டநேரம் காத்திருப்பதால் அவர்களுக்கு போராடுவதற்கு நேரம் குறைவாகவே கிடைக்கிறது.

ஐந்தாவது காரணம், எரிபொருள் விலை உயர்வினால் போக்குவரத்து ஒரு பிரச்சினையாக மாறியிருப்பது.நாட்டின் ஏனைய பாகங்களில் இருந்து காலிமுகத்திடலை நோக்கிப் பயணம் செய்வதற்குப் பெருந்தொகை பணத்தைச் செலவிட வேண்டியிருக்கிறது. இதுவும் ஒரு காரணம்.

மேற்கண்ட காரணங்களின் தொகுக்கப்பட்ட விளைவாக போராட்ட கிராமங்களில் ஒருவித தொய்வு ஏற்பட்டிருக்கிறது.போராட்டங்களின் விளைவாக மஹிந்த வெளியேறிவிட்டார்.பஸில் வெளியேறிவிட்டார்.இது போராடும் தரப்புக்கு உற்சாகத்தையும் உத்வேகத்தையும் அளிக்க வேண்டும். மஹிந்தவையும் பசிலையும் அகற்றியது போல கோட்டாபயவையும் அகற்றலாம் என்ற நம்பிக்கை இப்பொழுதுதான் அதிகரிக்க வேண்டும். ஆனால் நிலைமை அப்படியாகத் தெரியவில்லை.

எனினும் போக்குவரத்துச் செலவு காரணமாக காலிமுகத்திடலில் கூடுவோரின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைந்திருந்தாலும்,சிறிய பரவலான ஆர்ப்பாட்டங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன.மக்கள் தாங்கள் வாழும் இடங்களில் ஆங்காங்கே சிறியளவில் எதிர்ப்புகளை அவ்வப்போது காட்டிவருவதாக கோட்டா கோகம கிராமத்தை சேர்ந்தவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.அதாவது ஒரு மையமான இடத்தில் பெருந்தொகையானவர்கள் கூடுவதற்கு பதிலாக சிதறலாக பரவலாக சிறிய அளவில் எதிர்ப்புக்கள் காட்டப்படுவதாக அவர்கள் கூறுகிறார்கள்.

கடந்தவாரம் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த குமார் குணரட்னம் தமிழ் பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான செயற்பாட்டாளர்கள் காலிமுகத்திடலுக்கு வந்தால் போராட்டத்தின் பரிமாணம் வேறு விதமாக அமையும் என்று எதிர்பார்ப்பதாக தெரிகிறது. குமார் குணரட்ணம் வடக்கிற்கு வந்த அதே காலப்பகுதியில்தான் குருந்தூர் மலையில் புதிய தாதுகோப கலசத்தை பிரதிஷ்டை செய்யும் வேலைகள் முடுக்கிவிடப்பட்டன.தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்களின் எதிர்ப்பினால் அது கைவிடப்பட்டது.

ஆனால் அந்த மரபுரிமை ஆக்கிரமிப்பை குறித்து கண்டியிலும் காலிமுகத்திடலிலும் கோட்டா கோகம கிராமங்களில் எதிர்ப்புகள் காட்டப்படவில்லை. மாறாக இந்தியப் பெரு வணிக நிறுவனமான அதானி குழுமத்துடன் கோட்டாபாய அரசாங்கம் செய்து கொண்ட டீலுக்கு எதிராக காலிமுகத்திடலில் எதிர்ப்புக் காட்டப்பட்டிருக்கிறது. இது தொடர்பில் விசாரித்த பொழுது அது தொடர்பான செய்திகள் தமக்கு உரிய காலத்தில் கிடைக்கவில்லை என்று கொழும்பு கோட்டா கோகம கிராமத்தை சேர்ந்தவர்கள் தெரிவிக்கிறார்கள். ஆனால் தென்னிலங்கையில் போராடும் தரப்புக்கள் தமிழ் மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதற்கு கிடைத்த மிகப்பிந்திய தருணங்களில் அதுவும் ஒன்று.

கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு கோட்டா கோகம கிராமத்திலிருந்து செயற்பாட்டாளர்கள் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்தார்கள்.கோட்டா கோகம கிராமத்திலிருந்து யாழ்.நூலகத்திற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட நூல்களை கையளிப்பது அவர்களுடைய வருகையின் நோக்கம்.அது ஒரு நன்நோக்கம் என்பதில் சந்தேகமில்லை. தமிழ்மக்களின் கூட்டுக்காயங்களை சுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் அதில் உண்டு. அதேசமயம் தமிழ் மக்களின் கூட்டுக்காயங்கள் இதுபோன்ற நற்செயல்களால் மட்டும் சுகப்படுத்த முடியாத அளவுக்கு ஆழமானவை,தொடர்ந்து புதுப்பிக்கப்படுபவை  என்பதைத்  தமிழ் செயற்பாட்டாளர்கள் அவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். குருந்தூர்மலை ஆக்ரமிப்பு அதை நிரூபிக்கக் கிடைத்த ஆகப்பிந்திய உதாரணங்களில் ஒன்று.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More