இலங்கையின் மனித உரிமை நிலவரத்தின் முன்னேற்றத்தை சவாலான பொருளாதார நிலைமை திசைத்திருப்பக்கூடாது என்று பிரிட்டனின் பொதுநலவாய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் விக்கிபோர்ட் பிரிட்டிஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், சர்வதேச நாணயநிதியத்தின் பிரிவுகள் பொருளாதார கொள்கைகள் தொடர்பாக நிபந்தனைகளை விதிப்பதற்கு அனுமதிக்கின்ற போதிலும் அரசியல் அல்லது மனித உரிமை தொடர்பான நிபந்தனைகளை விதிப்பதற்கான ஏற்பாடுகள் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், சர்வதேச கடன் மன்றங்களின் ஏனைய உறுப்பினர்களுடன் இணைந்து இலங்கையின் கடன் பிரச்சினைக்கு தீர்வொன்றை காணமுயல்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக இலங்கை அரசாங்கத்துடனும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களுடனும் பேச்சுக்களை நடத்தவுள்ளதாகவும் யுத்தத்திற்கு பிந்திய பொறுப்புக்கூறல் விவகாரம் தொடர்பாக பிரித்தானியா உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்தோடு, ஐ.நா. மனித உரிமை பேரவையின் தீர்மானம் குறித்து இலங்கை ஆக்கபூர்வமான ஈடுபாட்டை காண்பிக்கவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.