·
ஊழியர் பற்றாக்குறையை சமாளிக்க மாற்று ஏற்பாடு!
ஜேர்மனியின் விமான நிலையங்களில் தோன்றியுள்ள பணியாளர் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்காக வெளிநாடுகளில் இருந்து ஊழியர்களை அழைத்துப் பணியில் ஈடுபடுத்துவதற்கு அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளது.
பயணிகளைப் பரிசோதனை செய்யும் (security checks) அலுவலர்கள், பொதிகளைப் பரிமாற்றுவோர் உட்பட விமான நிலையங்களின் சகல சேவைப் பிரிவுகளிலும் ஊழியர்களுக்குப் பெரும் ஆட்பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது.
கொரோனா பெருந்தொற்றுநோய் முடக்கங்கள் நீங்கியபிறகு விமானப்
பயணங்கள் முழு அளவில் வழமைக்குத் திரும்பி வருகின்றன. ஜேர்மனியில் கடந்த வாரத்துடன் கோடை விடுமுறைக்காகப் பாடசாலைகள் மூடப்பட்டதை அடுத்துப் பயணங்கள்
அதிகரித்துள்ளன. நாட்டின் விமான நிலையங்களில் நெரிசல் நிலை காணப்படுகிறது. போதிய பணியாளர்கள் இல்லாத காரணத்தால் சேவைகள் தடைப்பட்டுப் பயணிகள் ஆங்காங்கே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வெளிநாடுகளில் இருந்து – குறிப்பாகத் துருக்கியில் இருந்து – தற்காலிகமாகப் பணியாளர்களை அழைத்துக் கடமையில் ஈடுபடுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மனியின் மத்திய தொழில் அமைச்சர் ஹூபேடஸ் ஹெயில் (Hubertus Heil) இத்தகவலை வெளியிட்டிருக்கிறார். வழமையான பாதுகாப்பு நடைமுறைகளின் கீழ் பணிக்கு அமர்த்தப்படவுள்ள வெளிநாட்டவர்களுக்குப் போதியளவு ஊதியமும் தங்குமிட வசதியும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பாவின் ஏனைய சில விமான நிலையங்களும் இதே போன்று பயணிகளின் சடுதியான
பெருக்கத்தைச் சமாளிக்க முடியாமல் திண்டாடி வருகின்றன.
போதிய விமானிகள் இன்றிப் பறப்புகள் ஒத்திவைக்கப்படுகின்றன. பரிசோதிப்புப் பணியாளர்கள் இன்றி விமான நிலையங்களில் நீண்ட பயணிகள் வரிசைகள் தோன்றுகின்றன.
பயணப் பொதிகள் தேங்குகின்றன.
பயணிகளோடு விமான சேவை முகவர்கள் முறுகுப்படும் நிலைமை
அடிக்கடி உருவாகி வருகிறது. எதிர்வரும் ஜூலை – ஓகஸ்ட் விடுமுறைக் காலத்தில் விமானப் பயணிகள் எண்ணிக்கை மேலும் பல மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் ஆயிரக்கணக்கான விமான சேவைகள் பணியாளர் பற்றாக்குறை காரணமாக ரத்துச்செய்யப்படும் ஸ்தம்பித நிலையை எதிர்நோக்குகின்றன.
-பாரிஸிலிருந்து குமாரதாஸன்.
27-06-2022