சட்டவிரோதமான முறையில் கடல்மார்க்கமாக அவுஸ்ரேலியா செல்ல முற்பட்ட 45 பேரை இலங்கை கடற்படையினர் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர்.
திருகோணமலை – குச்சவெளி கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டவர்களில் 11 ஆண்களும் 9 பெண்களும் உள்ளடங்குவதனுடன்,20 வயதுக்கு கீழ்பட்ட 25 பேர் அடங்குவதாகவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்ட நபர்கள் தற்போது குச்சவெளி காவல் நிலையத்தில் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை குச்சவெளி காவற்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்களை இன்றைய தினம் திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குச்சவெளி காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தொண்டமனாறு பகுதியில் இருந்து அவுஸ்ரேலியா செல்ல முற்பட்ட நால்வர் கைது!
தொண்டமனாறு பகுதியில் இருந்து சட்டத்துக்குப் புறம்பாக படகு மூலம் அவுஸ்ரேலியா செல்ல முற்பட்டனர் என்ற குற்றச்சாட்டில் நான்கு பேர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு வல்வெட்டித்துறை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை ஒரு மணியளவில் இந்த கைது நவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.
வவுனியாவைச் சேர்ந்த இருவரும் திருகோணமலையைச் சேர்ந்த இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
தொண்டமனாறு இராணுவச் சோதனைச் சாவடிக்கு அண்மையாக அதிகாலையில் நடமாடிய நால்வரையும் இராணுவத்தினர் விசாரணை நடத்திய போதே அவர்கள் படகுமூலம் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டமை தெரியவந்தது. படகு ஒன்றுக்கு தலா 3 லட்சம் ரூபாய் வீதம் பணம் செலுத்தியதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.