Home இலங்கை உள்ளுர் வாழ்வியலும் அதில் நடமாடும் சிறு வணிகர்களின் அத்தியாவசியங்களும்!

உள்ளுர் வாழ்வியலும் அதில் நடமாடும் சிறு வணிகர்களின் அத்தியாவசியங்களும்!

by admin


இன்று நமது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிச் சூழலில் உள்ளுர் வளங்கள் அதனை மையப்படுத்திய சுயசார்பான வாழ்வியல் முறைமைகள் குறித்து அதிகம் அக்கறை செலுத்தப்பட்டு வருகின்றன. உதாரணமாக உள்ளுர்ப் போக்குவரத்துச் சாதனங்கள், உள்ளுர் உணவுப் பயன்பாடு என்பவற்றில் கணிசமான மக்கள் அக்கறை செலுத்தத் தொடங்கியுள்ளமையினை அவதானிக்க முடிகின்றது.


இதேநேரம் நெருக்கடிக் காலத்தில் குறைந்தபட்சமேனும் அடிப்படைத் தேவைகளைப் பெற்றுக் கொள்வதை உறுதிப்படுத்துவதற்கான அத்தியாவசியச் சேவைகளாகச் சில துறைகள் அடையாளங் காணப்பட்டு அவற்றுக்கான எரிபொருளை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதனையும் காண்கின்றோம். இந்த அத்தியாவசியத் துறைகளுள் உள்ளுர் வாழ்வியலின் இயக்கத்தில் பெருஞ்செல்வாக்குச் செலுத்தும் நடமாடும் சிறு வணிகர்களின் அத்தியாவசியச் சேவைகள் குறித்து எந்தவிதக் கவனமும் செலுத்தப்படாத நிலைமையைக் காண நேரிடுகின்றது. இக்கட்டுரையில் இதுவிடயமாகக் கவனஞ் செலுத்தப்படுகின்றது.


உள்ளுர் வாழ்வியலில் உற்பத்திகளைப் பரிமாற்றஞ் செய்வது அடிப்படையான விடயமாக இருந்து வருகின்றது. வௌ;வேறான உள்ளுர் உற்பத்திகளைப் பரிமாற்றஞ் செய்யும் நடமாடும் சிறு வணிகர்கள் இங்கு கவனத்திற்குரியவர்களாகக் கொள்ளப்படுகின்றார்கள். இத்தகைய வணிகர்கள் மோட்டார் வாகனங்கள் அறிமுகமாகாத காலங்களில் கால்நடையாகவும், மிருகங்களின் துணையுடன் இயக்கப்பெற்ற வண்டில்களையும் பின்னர் மிதி வண்டிகளையும் பயன்படுத்தித் தமது உள்ளுர் வணிக நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தார்கள். இதற்கு உதாரணமாக கால்நடையாக காவு தடியில் கூடைகளைப் பொருத்திச் சுமந்து கொண்டு மீன் வியாபாரம் செய்தவர்களையும், மூன்று சக்கர வண்டிலில் ஐஸ்பழம் விற்றவர்களையும், அரிசி, குரக்கன், பயறு, உழுந்து மாவு வகைகளைக் கால்நடையாகக் கொண்டு வந்து விற்று வாழும் பெண்களையும், மாட்டு வண்டிலில் மண்ணெண்ணை வியாபாரஞ் செய்த நபர்களையும்… எனப்பல உள்ளுர் சிறு வியாரிகளை ஞாபகத்திற் கொண்டு வர முடிகின்றது. இத்தகைய வியாபார முறைமை முற்றாக செயலிழந்து விடவில்லை மாறாக சின்னஞ்சிறிய அளவில் நடந்து வருவதனையும் அவதானிக்க முடிகின்றது. மோட்டார் வாகனங்களின் உள்வருகை அதிகரித்த பின்புலத்தில் இத்தகைய உள்ளுர் வணிகர்கள் இருசக்கர மோட்டார் வாகனங்களையும், முச்சக்கர வண்டிகளையும் தமது வசதி வாய்ப்புக்களுக்கேற்ப தருவித்துக் கொண்டு அதனூடாகத் தத்தமது நடமாடும் உள்ளுர் வணிக நடவடிக்கைகளை முன்னெடுத்தார்கள். இதன் காரணமாக உள்ளுர் நடமாடும் வணிகர்களின் வணிக நடவடிக்கைகளும் எல்லைகளும் விரிவு பெறும் நிலைமைகள் உருவாகின.


இந்த உள்ளுர் நடமாடும் வணிக நடவடிக்கையின் சாதகமான பக்கங்கள் பலவாக உள்ளன. இத்தகைய வணிகர்கள் பல்வேறு உள்ளுர் உற்பத்திகளைப் பரிமாற்றஞ் செய்யும் நபர்களாகச் செயலாற்றுகின்றார்கள். உதாரணமாக மீன் வளம் உள்ள இடத்திலிருந்து மீன் வளமற்ற ஊர்களை நோக்கி வணிகத்திற்காகச் செல்பவர்கள் தாம் வணிகஞ் செய்யும் ஊர்களில் மலிவாகக் கிடைக்கக் கூடிய பருவகாலங்களில் விளையும் காய்கறிகள், கிழங்கு வகைகள், பழவகைகள், கீரை வகைகள் முதலிய உள்ளுர் உற்பத்திகளைக் கொள்வனவு செய்து அவற்றினை இன்னுமொரு இடத்திற்குப் பரிமாறும் தன்மையுடன் இயங்குவதனைக் கண்டு வருகிறோம். இது தட்ப வெப்ப நிலைமைகளுக்கேற்ப இயற்கை தரும் பருவகால உற்பத்திகளை இலகுவாகப் பெற்றுக் கொள்வதற்கான வழிவகைகளை இலகுபடுத்தித் தருகின்றது. சிறந்த போக்குவரத்து வாய்ப்புக்களற்ற உள்ளுர்களின் உற்பத்திகளுக்கு பொருளாதாரப் பெறுமதியை வழங்கும் நடவடிக்கையாகவும் இது இருந்து வருகின்றது.


உள்ளுர் வணிகத்தின் முக்கியமான பக்கங்களுள் ஒன்று அது உள்ளுர் மனிதர்களின் பொருளியல் கொள்ளளவுக்கு ஏற்ற விதமாகப் பங்கீட்டு முறைமையிலான சில்லறை வியாபாரத்தை மனித முகத்துடன் நடைமுறைப்படுத்தி வருவதாகும்.


மேலும் இந்த நடமாடும் வணிகர்கள் வெறும் வியாபாரிகளாக மாத்திரமன்றி தாம் பயணஞ் செய்யும் ஊர்களின் புதினங்களைக் காவிக் கொண்டு சென்று அவற்றைப் பரிமாறும் நபர்களாகவும் விளங்கி வருகின்றார்கள். இவர்களிடமிருந்து ஊர்ச் செய்திகளை அறிவதற்காக உள்ளுர் மனிதர்கள் இவர்களை எதிர்பார்த்துக் காத்திருப்பதனையும், அவர்களைக் கண்டதும் பலவேறு விடயங்களையும் பற்றி அளவளாவித் தமது மனநலத்தை வளப்படுத்திக் கொள்வதையும் அவதானித்து வருகின்றோம்.


உள்ளுர்களுக்குச் சென்று வியாபாரஞ் செய்யும் நபர்கள் தாம் சென்று வியாபாரஞ் செய்யும் ஊரவர்களின் நம்பிக்கைக்குரிய மனிதர்களாக விளங்குவதனையும் அவதானிக்க முடிகின்றது. இத்தகையோர் வணிகர்களாக மாத்திரமன்றி தாம் கொடுக்கல் வாங்கல் செய்யும் மனிதர்களின் வாழ்வியலில் இடம்பெறும் வைபவங்கள், சடங்குகள், கொண்டாட்டங்கள் என்பவற்றில் பங்குபற்றுவோராகவும் விளங்கி வருகின்றார்கள்.


இந்த உள்ளுர் வணிகம் பல்வேறு பண்பாடுகளுடன் வாழும் உள்ளுர் மனிதர்களின் ஆக்கபூர்வமான ஊடாட்டத்திற்குரிய வாய்ப்புக்களை வலுப்படுத்தி வருவதனைக் காண முடிகின்றது. சாதி, மத, இன நல்லுறவிற்கான வாய்ப்பு வசதிகளை இது உட்கொண்டதாக இயக்கம் பெற்று வருவதனைக் காண்கின்றோம்.


ஒரு ஊரிற்குள் உள்ளுர் வணிகர்களின் வருகையானது அந்த ஊரிற்குக் கலகலப்பை உருவாக்கிச் செல்வதாகவே அமைந்து வருகின்றது. அதாவது கூவி விற்கும் குரலோசை, மணியோசை, குழல் ஓசை எனப்பலவேறு ஒலிகளை ஊரிற்குள் பரவச்செய்து ஊரின் உயிர்ப்பை மேலும் அழகுபடுத்திச் செல்வதாக நடைபெற்று வருகின்றது.


மேலும் ஊர்களில் வாழும் பெண்களின் பொருளாதார முகாமைத்துவத்துடன் மிகவும் நெருக்கமானதாக இந்த வணிகம் இடம்பெற்று வருகின்றது. குறிப்பாக பெண்கள் தமது இயலுமைக்கேற்ப மேற்கொள்ளும் உற்பத்திகளை பண்டமாற்று முறைமையூடாகப் பரிமாற்றஞ் செய்து தமக்கான பொருளியல் வலுவை உருவாக்கிக் கொள்வதற்கு இத்தகைய உள்ளுர் வணிகம் வாய்ப்புக்களை உருவாக்கி வருகின்றது.


இவ்வாறு சமூக பொருளாதார பண்பாட்டு நடவடிக்கைகளில் உள்ளுர்களின் இணைப்பாக்குனர்களாக இயக்கம் பெற்று வரும் நடமாடும் சிறு வணிகர்கள் நமது பண்பாட்டின் அத்தியாவசியத் துறையினராக உள்ளனர் என்பதை நாம் கவனத்திற் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகின்றது. இத்தகைய உள்ளுர் வியாபார நடைமுறைமையானது தன்னிறைவான மகிழ்ச்சிகரமான சமூகங்களின் உருவாக்கத்திற்குரிய வாய்ப்புக்களை வலுப்படுத்தும் எளிமையான அதேநேரம் மிக வலுமிக்க அடிப்படையான சேவையாக இயக்கம் பெற்று வருகின்றது.


இன்றைய பொருளாதார நெருக்கடிச் சூழலில் இத்தகைய உள்ளுர் வணிகர்களின் நடவடிக்கைகள் பட்டிணி எனும் பேராபத்திலிருந்து மனிதர்களைப் பாதுகாக்கும் தன்மைகள் கொண்டதாக இயக்கம் பெற்று வருவதனை உய்த்துணர முடிகின்றது. அதாவது குறைந்த பட்சமான உணவுத்தேவையினை உள்ளுர்களின் உற்பத்திகளினூடாக மனித அறத்துடன் பரிவர்த்தனை செய்யும் பொறிமுறைமைகள் கொண்டதாக இத்தகைய உள்ளுர் நடமாடும் வணிகம் விளங்கி வருகின்றது.


எனவே இத்தகைய நடமாடும் சிறு வணிகர்களை நமது உள்ளுர்ப் பொருளாதாரத்தின் அடிப்படையான அத்தியாவசியத் துறையினராகக் கவனத்திற் கொண்டு அவர்களின் ஓய்வுக் காலத்தில் அவர்கள் பொருளாதாரப் பாதுகாப்புடன் வாழ்வதற்கான ஏற்பாடுகளை வலுப்படுத்தி வழிப்படுத்தி முன்னெடுத்துச் செல்ல வேண்டியது இன்றியமையாததாகின்றது. இந்த வகையில் தற்போதைய பொருளாதார நெருக்கடிச் சூழலில் அவர்களுக்குரிய போக்குவரத்திற்கான எரிபொருளைப் பெற்றுக் கொள்வதை இலகுபடுத்த வேண்டியதும் அவசியமாகின்றது.


கலாநிதி சி.ஜெயசங்கர்
து.கௌரீஸ்வரன்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More