கலை மரபாகவும் மரபு ரீதியான தொழில் துறையாகவும் முக்கியத்துவம் உடையதாக உலோக வார்ப்பு கலை உலகம் முழுவதும் விளங்கிவருகிறது. தொழில்நுட்ப ரீதியாகவும் கலைவடிவமைப்பு ரீதியாகவும் வித்தியாசங்களுடனும் தனித்துவங்களுடனும் அடையாளம் காணப்பட்டும். வருகின்றன.
பண்பாட்டு மரபுகளின் வாண்;மையை வெளிப்படுத்துவதாகவும் உயர் வாணிபத் துறையாகவும் உலோக வார்ப்புக் கலையின் வரலாற்றினை காணமுடியும். இக்கலை மரபு மிகப் பெரும்பாலும் ஆண்களினுடையதாகவே இருந்து வருவதும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதில் பெண்களின் பங்களிப்பு பற்றிய விடயம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாக இருக்கிறது. மேலும் சாதி குலம் என்ற அடிப்படையிலும் வௌ;வேறு உலோகங்களுடன் வேலை செய்து வருபவர்கள் என்ற வகையிலும் வேறுபாடுகள் காணப்படுகின்றன. அத்துடன் உலோக வார்ப்புக்கலை, அக்கலை மரபுக்குரிய சமூகத்தினர் சார்ந்து நிறையவே தொன்மக் கதைகள், இலக்கியங்கள், வரலாறுகள், வழக்காறுகள் மற்றும் பல்வேறு கலை மரபுகளிலும் காணக்கிடைக்கின்றன.
இவை, குறித்த உலோக வார்ப்புத் தொழில் புரியும் சமூகத்தார் உள்ளிருந்தும் வெளியிருந்தும் வந்திருப்பதைக் காணமுடியும், மேற்படி சமூகத்தினரது இருப்பும் இயக்கமும் முழுதான சமூகங்களின் பின்னணியில் எத்தகைய இயங்குநிலையைக் கொண்டிருக்கிறது என்பதை புரிந்துகொள்ள இவை வாய்ப்பளிப்பனவாகவும் இருக்கின்றன. இத்தகைய பின்னணியில் உலோக வார்ப்பு கலை என்பது சவால்களுக்கும் சாதனைகளுக்கும் உரியதான கலை மரபாக நூற்றாண்டுகள் கடந்தும் புதிய புதிய நிலைகளில் உருவெடுத்து வருவது குறிப்பிடத்தக்கதாகும் வேறு வேறுபட்ட மூலகங்களுக்கும் மாற்றாக ‘பிளாஸ்ரிக்’ ஆதிக்கம் பெற்று நீக்கமற நிறைந்திருக்கும் சூழ்நிலையிலும் உலோக வார்ப்புக் கலையின் இருப்பு சிறப்பிடம் பெற்றிருப்பதும் குறிப்பிடப்பட வேண்டியது.
மேலும் உலோகங்கள் பெறப்படும் சூழலில் வாழ்கின்ற மக்கள் அனுபவிக்கும், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்பவை உலோக வாணிபத்துறை மற்றும் உலோகக் கலை மரபுகள் பற்றிய உரையாடல்களில் காணக்கிடைப்பதில்லை. மேற்படி அவலங்கள் கண்டு கொள்ளப்படுவதும் இல்லை.
நவீன கல்வியும் வரலாறும் கட்டமைக்கும் ஒருபக்கப் பார்வை சாதகங்களை மட்டுமே காண்பவையாகவும் காட்டுபவையாகவும் இருப்பதுடன் வலுக்கட்டாயமாக பாதகங்களை பார்க்கவும், காட்டவும் மறுப்பவையாகவுமே இன்னமும் வலுவாக இருந்து வருகிறது.
இந்நிலையில்தான் உலோக வார்ப்பு கலை சார்ந்து நின்றியங்கிவரும் பல்வேறுபட்ட ஆதிக்க நீக்கங்கள் பற்றியும் உரையாடவும் இயக்கவும் வேண்டி இருக்கிறது. இது சமூகங்கள் சார்ந்து இயங்குநிலையில் கண்ணுக்கும் கருத்துக்கும் தெரிந்தும் தெரியாமலும் நின்றியங்கிவரும் ஆதிக்கங்களின் நீக்கத்திற்கான செயற்பாட்டு இயக்கங்களுடன் தொடர்புபடுகிறது.
இத்தகையதொரு பின்னணியில் இ. குகநாதனது ‘கூத்தரின் சதங்கை வார்ப்பும் அவற்றின் பரிமாற்ற பொறிமுறைகளும்’; பற்றிய நூல் கவனிப்புக்குரியதாகிறது. கூத்தரங்கில் சதங்கைகளின் முக்கியத்துவம் சதங்கை அணி விழா என்ற கூத்தாக்க தொடர் செயற்பாட்டுப் பொறிமுறையில் முக்கியமான சமூகக் கொண்டாட்டமாக அமைக்கப்பட்டிருப்பது இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
சட்டம் கொடுக்கப்பட்டதிலிருந்து கூத்துப் பயின்ற கூத்தர்கள் ஆட்டங்களில் தேறிய நிலையில் அண்ணாவியாரால் சதங்கை அணி விழாவிற்கு நாள் குறிக்கப்படும். ஆட்டத்தில் தேறிய கூத்தர்கள் அரங்கேற்றத்திற்கு தயாராகி விட்டார்கள் என்பதை சமூகம் கொண்டாடி அறிவிக்கும் விழாவாக சதங்கை அணி விழா அமைக்கப்பட்டிருக்கிறது.
கூத்தரங்கில் ஆட்டத்தினதும், ஆட்டத்திற்கு சதங்கைகளிகனதும் முக்கியத்துவம் உணர்ந்த சமூகங்களின் அறிவியல் கொண்டாட்டமாக அமைந்திருப்பது உள்ளுர் அறிவு திறன் முறைகளின் நுண்ணறிவை புரிந்துகொள்ள முடிகிறது. இவ்வாறு பல்வேறுபட்ட விடயங்கள் சார்ந்தும் நவீனம் என்ற காலனிய அறிவுநிலை நின்று கேள்விகளின்றி மறுப்பதிலும் நிராகரிப்பதிலும் வெட்கப்படுவதிலும் இருந்து விடுவித்துக் கொள்வதற்கான வழிமுறையாக மீளுருவாக்கம் என்ற காலனிய ஆதிக்க நீக்க அணுகுமுறை கூத்தரங்கில் ஆரம்பிக்கப்பட்டு பல்வேறு துறைகள், விடயங்கள் சார்ந்தும் விரிவாக்கம் கண்டு வருவதும் நடைமுறை வரலாறாக இருக்கிறது.
இ. குகநாதனின் நூல் எழுதுவதற்காக எழுதப்பட்ட அல்லது ஆவணப்படுத்துவதற்காக எழுதப்பட்டதல்ல. உலோக வார்ப்பு கலைக்கும் பெயர் பெற்ற மட்டக்களப்பு பிரதேசத்தில் மேற்படி கலை தொழில் மரபின் சமகால நிலையும் நிலைப்பாடுகளும் பற்றிய அறிதலூடு ஆதிக்க நீக்கங்கள் பெற்ற கலைத் தொழிலாக மீளுருவாக்கம் செய்யும் பயணத்தின், பயணத்திற்கான அறிமுகக் கையேடாக அமைந்திருக்கிறது.
ஒருபக்கப் பார்வை கொண்ட ஆதிக்கம் நிறைந்த வணிகங்களுக்கு நலன் பயக்கும் நோக்கிலான திறந்தவெளிப் பொருளாதாரக் கொள்கையும் அதன் நீட்டமான நுகர்வுக் கலாசாரமும் அல்லது பாவனை பண்பாடும் எவ்வாறு உள்ளுர் கலைத்தொழில் மரபையும் அடையாளங்களையும் பாதித்திருக்கிறது என்பதை இந்நூலில் கண்டு கொள்ள முடியும்.
மேலும் சதங்கை உருவாக்கங்களிலும் பரிமாற்றங்களிலும் சவால்களுடன் சாதித்து வரும் வெகுசாதாரண மனிதர்களை அல்லது கவனத்தில் எடுக்கப்படாத மனிதர்களை கவனத்திற்குக் கொண்டு வருகிறது.
கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக மூன்றாவது கண் உள்ளுர் அறிவுத் திறன் செயற்பாடுகளுக்கான நண்பர் குழாம், நுண்கலைத்துறை கிழக்குப் பல்கலைக்கழகம், சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகம் எனப் பல்வேறு தளங்களில் மட்டக்களப்பு உலோக வார்ப்புக் கலைத்தொழில் மரபின் இருப்பிற்கும், நிகழ்கால மற்றும் எதிர்கால இயக்கத்திற்குமான முன்னெடுப்புகளிலும், இசைக்கருவி உருவாக்குநர் கூட்டுறவு உருவாக்க முன்னெடுப்புகளிலும் தோளோடு தோள் நின்ற செயற்பாட்டாளர்களில் இ.குகநாதன் முக்கியமானவர்.
மக்கள் தொடர்பு, கூட்டுறவு உருவாக்கம் என்பதில் ஈடுபாடு கொண்டவர். ‘சமூக வலுப்படுத்தலிற்காக கற்றல்’ என்ற தளத்தில் இயங்கி வருபவர். ‘தனிமனித வளப்படுத்தலிற்கு கற்றல்’ என்ற பெரும் போக்கான நவீன போக்கிற்கு எதிரான போக்கு இது.
இ. குகநாதனது அனுபவம் அறிவுநிலை சார்ந்து இந்நூலின் இரண்டாவது பதிப்பை இன்னும் ஆழமாகவும் விரிவாகவும் கொண்டு வருவது அவசியமான தேவையாகும்.
கலாநிதி சி. ஜெயசங்கர்