எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பாண் உட்பட வெதுப்பக உற்பத்திகளை தொடர்ந்தும் எம்மால் உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதென யாழ் மாவட்ட வெதுப்பக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
யாழ்ப்பாண மாவட்ட வெதுப்பக உற்பத்தியாளர்கள் சங்கத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போது வெதுப்பக உரிமையாளர்கள் இவ்வாறு தெரிவித்தனர். மேலும் தெரிவிக்கையில்,
இயற்கை அனர்த்தங்கள் உருவாகும் போது எமது உதவியை மாவட்ட செயலகத்தினர் எதிர்பார்க்கின்றனர். ஆனால் தற்போது எம்மை கைவிட்டுள்ளனர். நாம் எமக்கு டீசலை பெற்று தரக்கோரி பல தடவை கோரிக்கை விடுத்தும் அதற்கு யாரும் செவிசாய்க்கவில்லை. இந்நிலையில் தொடர்ந்து நம்மால் வெதுப்பாக உற்பத்திகளை செய்ய முடியாது.கறுப்புச் சந்தையில் டீசலைப் பெற்று மக்களுக்கு வெதுப்பக உற்பத்திகளை வழங்க முடியாது.இறுதியாக நாம் டீசலை பெற்றுதரக்கோரி இராணுவத்தினரின் உதவியை நாடவிருக்கின்றோம் என்றனர்