இலங்கையின் தற்போதைய சூழ்நிலைக்கு தீர்வு கிடைக்கும் என்று தாம் நம்புவதாகத் தெரிவித்துள்ள சர்வதேச நாணய நிதியம், பிணை எடுப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாகவும் இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையுடன் ஓர் இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு பேச்சுவார்த்தையை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என்றும் நிதி அமைச்சு மற்றும் இலங்கை மத்திய வங்கி அதிகாரிகளுடன் தொழில்நுட்ப விவாதங்களைத் தொடர தாம் திட்டமிட்டுள்ளதாக நிதியம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட தூதுவர் பீட்டர் ப்ரூயர் மற்றும் தலைமை அதிகாரி மசாஹிரோ நோசாகி ஆகியோர், இலங்கையில் நடைபெற்று வரும் நிகழ்வுகளை சர்வதேச நாணய நிதியம் உன்னிப்பாக அவதானித்து வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.
தற்போதைய பொருளாதார நெருக்கடியின் தாக்கம் காரணமாக ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய குழுக்கள் மீது ஏற்பட்டுள்ள பாரிய தாக்கம் குறித்து ஆழ்ந்த கவலை ஏற்பட்டுள்ளது என்றும் நிதியம் தெரிவித்துள்ளது.
கடினமான இந்த நேரத்தில், சர்வதேச நாணய நிதியக்கொள்கைகளுக்கு இணங்க, இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியதாகவும் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை மத்திய வங்கியும் சர்வதேச நாணய நிதியமும் ஓகஸ்ட் மாதத்துக்குள் பணியாளர் மட்ட உடன்படிக்கைக்கு வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.