ஜனாதிபதியை இராஜினாமா செய்யுமாறு கோரி கோட்டை ஜனாதிபதி மாளிகையை நோக்கித் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான அமைதிவழி ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸாரும் பாதுகாப்பு படையினரும் தொடர்ச்சியாகக் கண்ணீர் புகை தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். காலையிலிருந்து, செத்தம் வீதி மற்றும் யோர்க் வீதி திசையிலிருந்து போராட்ட தளத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள்மீது ஏராளமான கண்ணீர் புகை தாக்குதல்கள் பிரயோகிப்பட்டதுடன், மு.ப 11.15 மணியளவில் ஜனாதிபதி அலுவலகத்திற்கு முன்பாக உள்ள கோட்டாகோகம போராட்ட தளத்தில் இருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதும் கண்ணீர்புகை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேற்று (08 ஜூலை 2022) போராட்டங்களைத் தடுக்கும் வகையில் பொலிஸ் மா அதிபர் சட்ட விரோத பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தியதுடன் சட்டத்தரணிகள் உட்பட பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பின் காரணமாக இன்று (09 ஜூலை 2022) காலை முதல் அதனை நீக்க நேரிட்டது. இதையடுத்து போராட்டக்காரர்கள்மீது கண்ணீர் புகை குண்டுகளைப் பிரயோகிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இது அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறுவதாகக் கூறும் சுதந்திர ஊடக இயக்கம் இந்தச் சட்டவிரோத தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும் இந்தத் தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாறு பொலிஸ் மா அதிபர், பாதுகாப்பு செயலாளர் மற்றும் ஏனைய அதிகாரிகளை வலியுறுத்துகின்றது.
அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபடும் உரிமையைப் பாதுகாக்க தலையிடுமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு மனித உரிமைப் பாதுகாவலர்களைசுதந்திர ஊடக இயக்கம் கேட்டுக்கொள்கிறது.
பாதுகாப்புப் படைகளின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் மற்றும் துன்புறுத்தல்களுக்கு மத்தியில், வன்முறைக்கு அடிபணியாமல் தங்கள் இலக்குகளை வென்றெடுக்க அணிதிரளுமாறு அனைத்து குடிமக்களையும் சுதந்திர ஊடக இயக்கம் சகோதர வாஞ்சையுடன் வேண்டிக்கொள்கின்றது.
லசந்த டி சில்வா அழைப்பாளர் | ஹனா இப்ராஹீம் செயலாளர் |