ராஜபக்சஸ குடும்பத்தினர் நாட்டை விட்டு வெளியேறுவதில் பாரிய எதிர்விளைவுகளை எதிர்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இலங்கையின் சர்வதேச விமான நிலையங்களில் இவர்களுக்கு ஏற்பட்டு இருக்கும் நெருக்குதல்கள், விமான நிலைய அதிகாரிகள் ஒத்துழைக்க மறுக்கின்றமை, இவர்கள் மீதான கண்காணிப்புகளின் தீவிரம் என்பன அவர்களது வெளியேற்றத்தில் சிக்கலான நிலமையை ஏற்படுத்தி உள்ளன.
விமான நிலையங்களில் பிரமுகர்கள் பயணிக்கின்ற பிரிவுகளில் பணியாற்றுகின்ற குடிவரவு – குடியகல்வு அதிகாரிகள் பணிகளில் இருந்து வெளியேறியுள்ளதாக அறிவித்துள்ளனர். நாட்டை விட்டுத் தப்பிச் செல்வோரைத் தடுப்பதற்காகவே அவர்கள் அவ்வாறு பணிகளைப் புறக்கணிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
கோட்டாபய ராஜபக்ச 13ஆம் திகதியிடப்பட்ட தனது பதவி விலகல்க் கடிதத்தில் ஏற்கனவே ஒப்பமிட்டுள்ளார் என்றும் அதனை நாளை புதன்கிழமை (13.07.22) சபாநாயகர் அதிகாரபூர்வமாக வெளியிடுவார் என தெரிவிக்கப்படுகிறது.
பதவியில் இருந்து விலகுவதற்கு முன்னராகத் தனக்கு இருக்கும் ஜனாதிபதிக்கான விசேட பயணப் பாதுகாப்புகளைப் பயன்படுத்தி நாட்டில இருந்து தப்பிச் செல்ல அவர் முனைவதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே ஜனாதிபதி கோட்டாபய நாட்டிலிருந்து வெளியேறிச் செல்ல கடந்த சனிக்கிழமை முயற்சிசெய்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாகவே செல்ல முயற்சித்துள்ளார். எனினும் விமான நிலைய அதிகாரிகள் அதற்கு மறுத்ததனால் அவர் இராணுவ முகாமில் தங்க வைக்கப்பட்டு பின்னர் கப்பலுக்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இளைய சகோதரர் பசில் ராஜபக்சவும் கொழும்பு விமான நிலையத்தில் இருந்து அதிவிசேட பிரமுகர் பிரிவின் ஊடாக வெளியேறிச் செல்ல முற்பட்டபோது அதகாரிகள் ஒத்துழைக்க மறுத்ததுடன், அவருக்கு கடுமையான எதிர்ப்புகள் வெளியிடப்பட்டதனை அடுத்து அவர் வீடு திரும்பியதாக கூறப்படுகிறது.
எனினும் இந்த எதிர்ப்பகளையும் மீறி ராஜபக்ஸக்கள் கடல்வழியாக நாட்டை விட்டு வெளியேறலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.