கோப்பாய் காவல்துறைப் பிரிவில் மூன்று வீடுகளில் திருட்டுக்களில் ஈடுபட்டமை மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன். அவருக்கு உதவியமை, திருடப்பட்ட பொருட்களை உடைமையில் வைத்திருந்தமை , திருட்டு பொருட்களை அடகு வைக்க உதவியமை ஆகிய குற்றசாட்டுக்களில் 09 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஜூன் மாதம் கோப்பாய் காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட இரு வீடுகளை உடைத்து, தங்க நகைகள், பெறுமதிவாய்ந்த அலைபேசிகள், சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் துவிச்சக்கர வண்டி ஆகியன திருடப்பட்டன. அவை தொடர்பில் கோப்பாய் காவல் நிலையத்தில் உரிமையாளர்களால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
அதேவேளை கோப்பாய் காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து, வீட்டில் இருந்த பெண்ணின் தங்க சங்கிலி அறுக்கப்பட்டு , கொள்ளையடிக்கப்பட்டது.
அது தொடர்பிலும் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
குறித்த சம்பவங்கள் சம்பவங்கள் தொடர்பில் யாழ்ப்பாணம் மூத்த காவல்துறை அத்தியட்சகரின் கீழ் இயங்கும் தலைமை காவல்துறை பரிசோதகர் நிகால் பிரான்சிஸ் தலைமையிலான மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்தனர். விசாரணைகளின் அடிப்படையில் சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரை சந்தேகத்தில் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.
குறித்த சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் உடந்தையாக இருந்தவர்கள், அடகு வைத்துக் கொடுத்தவர்கள் என கிளிநொச்சி, சுன்னாகம் பகுதிகளை சேர்ந்த சேர்ந்தவர்கள் மற்றும் யாழ்பபாணம் நகைக்கடை உரிமையாளர் என மேலும் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
அத்துடன் அவர்களிடம் இருந்து, திருட்டப்பட்ட பொருட்கள், கொள்ளையிடப்பட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர் போதைப்பொருளுக்கு அடிமையாகி தொடர்ச்சியாக கொள்ளை மற்றும் திருட்டில் ஈடுபட்டு வந்ததுடன் காவல்துறையினரினால் தேடப்பட்டு வந்தவர் என்று காவல்துறையினர் கூறினர்.