மாலே சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மனைவி, இரண்டு பாதுகாவலர்களுடன் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஏற்றிக் கொண்டு புறப்படும் செளதி ஏர்லைன்ஸ் விமானம்
இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து புதன்கிழமை அதிகாலையில் மாலத்தீவுக்கு தமது மனைவி, இரண்டு பாதுகாவலர்களுடன் சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இன்று அங்கிருந்து சிங்கப்பூருக்குப் புறப்பட்டுள்ளார். அவரது விமான புறப்பாடு மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தபோதும், அவர் பயணம் செய்த விமானத்தின் படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
முன்னதாக, கோட்டாபயவை மாலத்தீவு நாடாளுமன்ற சபாநாயகர் முகமது நஷீத் விமான நிலையத்தில் புதன்கிழமை வரவேற்றார். ஆனால், அவர் நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக இலங்கையில் தகவல் வெளியானது.
இதைத்தொடர்ந்து கொழும்பு காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களில் சிலர் கோட்டாபய நாட்டை விட்டு ஓடி விட்டார் என்று கூறி ஆரவாரம் செய்தனர். மறுபுறம் அவர் தாய்நாட்டுக்குள்ளேயே இருந்திருக்க வேண்டும், அவரை தப்ப விட்டிருக்கக் கூடாது என்று மற்ற போராட்டக்குழுவினர் குரல் எழுப்பினர்.
இந்த நிலையில், தம்மிடம் தெரிவித்த பிறகே ஜனாதிபதி கோட்டாபய வெளிநாடு சென்றதாக பிரதமர் ரணில் கூறினார். இதேபோல, சபாநாயகரும் ஜனாதிபதி தம்மிடம் வெளிநாடு சென்ற தகவலை தெரிவித்ததாக கூறினார். மேலும், தாம் வெளிநாடு செல்லவிருப்பதால் பொறுப்பு ஜனாதிபதியாக ரணில் நியமித்துள்ளதாக கோட்டாபய பெயரில் அரசு வர்த்தமானியும் வெளியானது.
ஆனால், ஜூலை 13ஆம் தேதி இலங்கை ஜனாதிபதி பதவியில் இருந்து கோட்டாபய விலகுவார் என்று அவர் தம்மிடம் கூறியதாக சபாநாயகர் கூறியிருந்தார். ஆனால், அந்த கூற்றுப்படி கோட்டாபய பதவியில் இருந்து விலகாமல் ஜனாதிபதி அந்தஸ்துடனேயே மாலத்தீவுக்கு நேற்றும் அங்கிருந்து இன்று சிங்கப்பூருக்கும் சென்றிருக்கிறார்.
கோட்டாபய ஏற்கெனவே சிங்கப்பூருக்கு மருத்துவ சிகிச்சைக்காக பல முறை சென்றுள்ளார். அதன் தொடர்ச்சியாக இப்போதும் கோட்டாபய மருத்துவ காரணங்கள் என்ற பெயரில் சிங்கப்பூருக்கு சென்றிருப்பதாக பிபிசிக்கு தெரிய வந்துள்ளது.
ஜனாதிபதி மாளிகை, பிரதமர் அலுவலகத்தை விட்டு வெளியேறும் போராட்டக்காரர்கள்
இதற்கிடையே, இலங்கை பிரதமர் அலுவலகம், ஜனாதிபதி மாளிகை போன்ற முக்கிய இடங்களை தங்கள் வசம் வைத்திருந்த போராட்டக்காரர்கள், இன்று அந்த இடங்களை மீண்டும் பாதுகாப்புப்படை வசம் ஒப்படைக்க தீர்மானித்து அங்கிருந்து வெளியேறினார்கள். அந்த பகுதிகள் தற்போது பாதுகாப்புப்படை வசம் வந்துள்ளன.
முன்னதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பதவி விலகக் கோரி சனிக்கிழமையன்று அவரது ஜனாதிபதி மாளிகையை ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டதை அடுத்து அவர் பதவி விலகுவதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
இலங்கையில் நேற்று புதன்கிழமை பிரதமர் அலுவலகம் அருகே நடந்த போராட்டத்தில் போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசினர். இதில் சிக்கி மூச்சுத் திணறிய ஒரு போராட்டக்காரர் மருத்துவமனையில் இறந்தார். 84 பேர் காயமடைந்தனர்.
இதனிடையே, இலங்கையில் போராட்டக்காரர்களினால் கைப்பற்றப்பட்ட ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, பிரதமர் இல்லம் மற்றும் பிரதமர் அலுவலகம் ஆகியவற்றை மீள அரசாங்கத்திடம் கையளிக்க போராட்டக்காரர்கள் தீர்மானித்துள்ளனர்.
கொழும்புவில் இன்று (14) முற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டனர். எனினும், ஜனாதிபதி செயலகம் மற்றும் காலி முகத்திடலை அண்மித்த பகுதிகளில் முன்னெடுக்கப்படும் போராட்டம் தொடரும் என அவர்கள் அறிவித்துள்ளனர். தம்மால் கைப்பற்றப்பட்ட இடங்களிலிருந்து அமைதியான முறையில் வெளியேற எதிர்பார்த்துள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர். தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என அவர்கள் அறிவித்துள்ளனர். ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமரின் அதிகாரபூர்வ இல்லம் ஆகியவற்றை போராட்டக்காரர்கள் கடந்த 9ம் தேதி தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
அத்துடன், பிரதமர் அலுவலகத்தை நேற்றைய தினம் போராட்டக்காரர்கள் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருந்தனர். இந்த நிலையில், நேற்றிரவு நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியை கைப்பற்றுவதற்கு போராட்டக்காரர்கள் முயற்சிகளை மேற்கொண்ட நிலையில், பாதுகாப்பு பிரிவினர் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியிருந்தனர். இதில் பலர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறான பின்னணியிலேயே போராட்டக்காரர்கள், இந்த தீர்மானத்தை எட்டியுள்ளனர். அமைதியான முறையில் நடத்தப்படும் போராட்டத்தை, தொடர்ந்தும் அமைதியாக முன்னெடுப்பதற்கு போராட்டக்காரர்கள் தீர்மானித்துள்ளதாக அறிய முடிகின்றது.
இதனிடையே, கொழும்பு மாவட்டத்திற்கு இன்று மதியம் 12 மணி முதல் நாளை அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, நாட்டைவிட்டு வெளியேறிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாலத்தீவில் இருந்து கிளம்பி சிங்கப்பூர் செல்வதாகவும், சிங்கப்பூர் சென்று சேர்ந்த பிறகு அவர் பதவி விலகல் கடிதத்தை அளிப்பார் என்றும் கூறப்படுகிறது.
BBC