ஒரு நாட்டில் வாழும் மனிதர்களிடையே ஆளுமைகளின் உருவாக்கமும் அவர்களுக்கான அங்கீகாரமும் மிகவும் கவனத்திற்குரியதாக இருந்து வருகின்றன. அதாவது நாட்டின் ஆக்கபூர்வமான வளர்ச்சிக்கு ஆளுமைகளின் பங்களிப்பு இன்றியமையாததாகும். நவீன அரசாங்கங்களிலும், நவீன அரச கட்டமைப்புக்களிலும் துறைசார் ஆளுமைகள் என அங்கீகாரம் பெற்ற நபர்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருவதனைக் காண்கின்றோம். துறைசார்ந்த தீர்மானங்களை மேற்கொள்ளும் போது இத்தகைய அங்கீகாரம் பெற்ற ஆளுமைகளின் கருத்துக்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகின்றன. நிபுணத்துவ ஆலோசனைகளும் வழிப்படுத்தல்களும் மிகவும் அவசியமாகக் கருத்திற் கொள்ளப்பட்டே நவீன அரச சட்டமைப்பு இயக்கம் பெற்று வருவதனைக் காண்கின்றோம்.
இவ்வாறு துறைசார் நிபுணத்துவ ஆலோசனைகள் வழிப்படுத்தல்கள் என்பவற்றினை உட்கொண்ட வகையில் கட்டமைக்கப்பட்டுள்ள நவீன அரச நிருவாக நடைமுறைகளின் வினைத்திறன், விளைதிறன் தொடர்பாக மதிப்பீடுகளும் விமரிசனங்களும் முன்வைக்கப்பட்டு வருவதனைக் காண்கின்றோம். நவீன கட்டமைப்புக்களுடன் இயக்கம்பெற்று வரும் வளர்முக நாடுகளின் பொதுவான சவாலாக ஊழல் விருத்திபெற்றுள்ளமையினை அடையாளங் காண முடிகின்றது. ஊழல் அதிகரிப்பால் நாடுகளின் பொருளாதாரம் பெருவீழ்ச்சி கண்டு வருவதனையும் அனுபவித்து வருகின்றோம்.
இந்த இடத்திலேயே அங்கீகாரம் பெற்ற நிபுணத்துவம் தொடர்பாகக் கேள்வி எழுப்ப வேண்டியது தவிர்க்க முடியாததாக இருக்கின்றது. ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தவல்ல தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் போது அதற்கு ஆதரவு வழங்கிய துறைசார் நிபுணத்துவங்கள் தொடர்பாகச் சிந்திக்க வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது. இந்த இடத்திலேயே நிபுணத்துவ அங்கீகாரங்களை வழங்கி வரும் இன்றைய கல்வி முறைமை தொடர்பாகவும் சிந்திக்க வேண்டியுள்ளது.
இந்தவகையில் நவீன கல்வி முறைமையில் ஓர் ஆளுமையின் அடையாளப்படுத்தலானது சான்றிதழ் ஊடாக உறுதிப்படுத்தப்படுவதாக இருந்து வருவதனைக் காண்கிறோம். செயற்பாடுகளை மையப்படுத்தி அறிவு, திறன், மனப்பாங்கு என்பவற்றை மதிப்பீட்டிற்குள்ளாக்கி ஆளுமைகளுக்கான அங்கீகாரத்தை வழங்கும் தன்மை நவீன முறைமைகளில் பெரும்பாலும் நடைமுறையில் இல்லாது காகிதத்தில் சான்றிதழ்களை வழங்கி அங்கீகரிக்கும் நிலைமையே பெரும் போக்காக இருந்து வருகின்றது. இத்தகைய காகிதத் தகுதியைப் பெற்றுக்கொள்வதும் ஊழலுக்குள்ளாகியுள்ளமை அவதானிக்கப்படுகின்றது. இவ்வாறு நவீன சான்றிதழ் அங்கீகாரம் என்பது மெய்யான ஆளுமைகளை இனங்காணவும் இனங்காட்டவும் தவறி வருகின்ற நிலைமைகளில் மெய்யான ஆளுமைகளை உருவாக்கி இனங்காட்டி வரும் பாரம்பரியமான உள்ளுர் ஆளுமைகளுக்கான அங்கீகார முறைமை தொடர்பாகக் கவனஞ் செலுத்த வேண்டியது அவசியமானதாக மேலெழுந்து நிற்கின்றது.
பாரம்பரியமான ஆளுமை அங்கீகார முறைமையினை விளங்கிக் கொள்வதற்கு ஒரு சமூகத்தில் பாரம்பரியக் கலைஞர்களுக்கான அங்கீகாரம் வழங்கப்படும் விதத்தினை மையப்படுத்தி உரையாடுவது பொருத்தமானதாக இருக்கின்றது. அதாவது அண்ணாவிமார், பூசாரிமார் எனப்படுவோருக்கான சமூக அங்கீகாரம் உள்ளுர்ப் பண்பாடுகளில் எவ்வாறு வழங்கப்பட்டு வருகின்றது என்பது பற்றி அவதானத்தைச் செலுத்தும் போது இவ்விடயத்தை தெளிவாக விளங்கிக் கொள்ள முடிகிறது.
கூத்தினைப் பயிலும் ஒரு சமூகத்தில் கூத்தின் ஆற்றுகை சார்ந்து பல்வேறு தேர்ச்சியுடையோர் காணப்படுவர். இவர்களுள் அண்ணாவி என்பவர் தனித்து இனங்காணப்படுபவராகவே விளங்கி வருகின்றார். குறிப்பாக அண்ணாவியாருக்குள்ள அடிப்படைத் தகுதிகளுள் ஒன்றாக மத்தளம் வாசித்தல் கொள்ளப்படும் நிலையில் மத்தளம் அடிப்போர் எல்லோரையும் ஊரில் அண்ணாவி என்று எவரும் கூற மாட்டார்கள். மாறாக நீண்ட கால அவதானங்கள் ஊடாக அண்ணாவி எனும் ஆளுமைக்கான அங்கீகாரம் அங்கே வழங்கப்படுவதனைக் காண முடிகின்றது. இங்கு அண்ணாவிக்குரிய அடையாளப்படுத்தலுக்கான தகுதிகளாக அவரின் செயற்பாட்டுத் திறனும் பொது வெளியில் அவர் காட்டும் வித்துவ வெளிப்பாடுகளும் கொள்ளப்பட்டு வருகின்றன. தொடர்ச்சியாகவும் கணிசமான காலங்களுக்கும் அவரது செயற்பாடுகளும் வித்துவ வெளிப்பாடுகளும் ஊர் மக்களால் அவதானிக்கப்பட்டு ஒரு கட்டத்தில் அவருக்கு அண்ணாவி எனும் அங்கீகாரம் வழங்கப்படுகின்றன.
இவ்வாறு அண்ணாவி எனும் அங்கீகாரத்தைப் பெறும் நபர் தான் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூகத்தில் மாத்திரமன்றி வௌ;வேறு சமூகக் குழுமங்கள் மத்தியிலும் அங்கீகாரத்திற்குரியவராக விளங்குவது இங்கு கவனிக்கத்தக்க முக்கிய அம்சமாக உள்ளது. இத்தகைய அண்ணாவிமார்கள் பாரம்பரியமான சமூகக் கட்டமைப்பில் விளிம்பு நிலைகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் மேல்நிலைச் சமூகங்கள் மத்தியிலும் மரியாதைக்குரிய ஒருவராக மதிக்கப்படுவதையும் காண முடிகின்றது. இவ்வாறு ஏற்றத்தாழ்வுகள் கடந்து மதிப்பிற்குரிய நபராக அண்ணாவிமார் திகழ்வதற்கு அவர்களுடைய செயற்பபாட்டு வித்துவமே காரணமாக அமைவது குறிப்பிடத்தக்கது.
இதேபோல்தான் பாரம்பரியமான பத்ததிச் சடங்குப் பண்பாட்டில் முக்கிய நபராக விளங்கும் பூசாரிகளுக்கான அங்கீகாரமும் உள்ளுர்ச் சமூகங்களிடையே வழங்கப்பட்டு வருகின்றது.
தொடர்ச்சியாகவும் கணிசமான வருடங்களாகவும் பூசகராகச் செயலாற்றும் ஒருவர் பொது வெளியில் காட்டும் ஆற்றல் வெளிப்பாடுகள், வித்துவ வெளிப்பாடுகள் என்பவற்றை அவதானித்து ஒரு கட்டத்தில் அவர் பூசாரி எனும் அங்கீகாரம் சமூகங்களால் வழங்கப்பட்டு வருகின்றது. ஒரு பூசகரின் வாரிசு என்பதாலோ, அவர் காட்டும் புறத் தோற்ற வெளிப்பாடுகளை வைத்தோ ஒருவரை பூசாரி என்று முத்திரை குத்த மாட்டார்கள் மாறாக வருடாந்தச் சடங்கு விழாக் காலங்களில் குறித்த நபரின் ஆற்றுகைகளை அவதானித்தே பூசாரி எனும் பட்டம் உள்ளுர்ச் சமூகங்களால் வழங்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு ஒரு சமூகத்தில் அங்கீகாரம் பெறும் பூசாரிக்கு வெளிச் சமூகங்களிடையேயும் அங்கீகாரம் வழங்கப்படுவதனைக் காண முடிகின்றது.
இவ்வாறே உள்ளுர்ப் பண்பாடுகளில் ஒவ்வொரு துறைகளைச் சேர்ந்த தேர்ச்சி மிக்க ஆளுமைகளுக்கான அங்கீகாரம் வழங்கப்படுவதனையும் அத்தகைய அங்கீகாரம் நிலைபேறானதாக இருந்து வருவதையும் அவதானிக்க முடிகிறது.
எனவே முடிவாக நமது பாரம்பரியமான உள்ளுர்ப் பண்பாடுகளில் துறைசார் நிபுணத்துவ அங்கீகாரம் என்பது துறைசார்ந்த செயற்பாடுகளை மையமாகக் கொண்டு நீண்ட காலத்து மதிப்பீடுகளுடாக வழங்கப்படுவதனையும், அது நிலைபேறானதாகவும் உண்மையானதாகவும் விளங்குவதை நாம் உறுதிப்படுத்த முடிகின்றது. இத்தகைய அங்கீகார முறைமை நமது நவீன கட்டமைப்புக்களிலும் கவனத்திற் கொள்ளப்பட்டு பிரயோக நிலைக்கு வரும் போதே வினைத்திறனும், விளை திறனும் கொண்ட நிபுணத்துவங்களை நாம் எதிர்பார்க்க முடியும்.
கலாநிதி சி.ஜெயசங்கர்
து.கௌரீஸ்வரன்