Home இலங்கை எரிபொருள் விநியோகம் தொடர்பில் யாழ்.மாவட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்!

எரிபொருள் விநியோகம் தொடர்பில் யாழ்.மாவட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்!

by admin

ரிபொருள் விநியோகம் தொடர்பான கலந்துரையாடல் நேற்று வெள்ளிக்கிழமை யாழ் மாவட்ட செயலாளரின் தலைமையில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாக யாழ் மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்தார்.

01.எரிபொருள் விநியோகத்திற்கான வழங்கப்பட்டுள்ள வெள்ளை, நீலம், றோஸ் நிற அட்டைகளை பரிசீலிப்பதுடன் தேசிய திட்டத்தின் பிரகாரம் வாகனத்தின் இறுதி இலக்கத்தினை பரிசீலித்து சுகாதாரத் துறையினர் உட்பட அனைவருக்கும் ஒரே வரிசையில் எரிபொருள் வழங்கப்படவேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது. மேலும் எரிபொருள் அட்டை விநியோகம் தொடர்பாக ஒன்றுக்கு மேற்பட்ட வாகனங்கள் இருப்பின் அதனை உறுதிப்படுத்தி ஒரு வாகனத்திற்கு ஒரு அட்டையினை வழங்குமாறு பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஓகஸ்ட் மாதம் வரை QR code உடன் இணைந்த வகையில் எரிபொருள் அட்டையிலும் விநியோகப் பதிவு மேற்கொள்ளப்படுமென தீர்மானிக்கப்பட்டது.

02. திணைக்கள வாகனங்கள், அம்புலன்ஸ் என்பவற்றுக்கு அவற்றுக்கான எரிபொருட் கட்டளை மூலம் எரிபொருள் பெறும் இடத்தில் எரிபொருள் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது. அரச, தனியார் அம்புலனஸ்களுக்கு இலங்கை போக்குவரத்துச்சபையினூடாகவும் எரிபொருள் விநியோகிக்க முடியும்.

03. ஒப்பந்தக்காரர்கள் ஒப்பந்த வேலைகள் நடைபெறும் இடத்தின் பிரதேச செயலாளரிடம் அல்லது அயல் பிரதேச செயலகத்தில் முன்கூட்டியே அனுமதியினை பெற்று எரிபொருளினை இறுதி இலக்கத்தின் அடிப்படையில் பெற்றுக்கொள்ளலாம்.

04. வெளிநாட்டுக்கு செல்வதற்காக டீசல் பெறவுள்ளவர்கள் ஒரு வாரத்திற்கு முன்னரே கிராம உத்தியோகத்தர் ஊடாக பிரதேச செயலாளரிடம் அனுமதியினை பெற்று அவ்வாகனத்திற்குரிய இறுதி இலக்க தினத்தன்று எரிபொருளை பெற்றுக்கொள்ளலாம் எனத் தீர்மானிக்கப்பட்டது.

05. வெளிமாவட்டத்தினை சொந்த முகவரியாக கொண்டு யாழ்ப்பாண மாவட்டத்தில் தனியார் துறைகளில் கடமையாற்றுபவர்கள் பெயர், விபரங்களை திணைக்களத்தினூடாக சமர்ப்பித்து உரிய பிரதேச செயலாளரிடம் அட்டையினை பெற்றுக்கொள்ள முடியும்.

06. வெளிமாவட்டத்தினை சொந்த முகவரியாக கொண்டு யாழ்ப்பாண மாவட்டத்தில் அரச திணைக்களங்களில் கடமையாற்றுபவர்கள் பெயர், விபரங்களை திணைக்களத்தினூடாக சமர்ப்பித்து மாவட்டச் செயலகத்தில் தமக்குரிய அட்டைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

07. பல்கலைக்கழகம், உயர் தொழில்நுட்ப நிறுவனம், தொழில்நுட்பக் கல்லூரி என்பவற்றில் கல்வி கற்கின்ற வெளியூர் மாணவர்களுக்கு துறைத் தலைவரின் திணைக்களத் தலைவரின் உறுதிப்படுத்தலுடன் கடிதம் பெற்று பிரதேச செயலாளரிடம் வெள்ளை நிற விநியோக அட்டை பெறமுடியும்.

08. விவசாயிகள், பேக்கரிகள், வாழ்வாதார தேவைகள், மின்பிறப்பாக்கிகள் என்பவற்றுக்கான எரிபொருள் விநியோகம் பிரதேச செயலாளரால் விநியோகிக்க முடியும்.

09. வணிகர் கழகத்தின் ஊடாக அத்தியாவசிய உணவு விநியோகத்திற்காக பயன்படுத்தப்படுகின்ற வாகனங்களுக்கு ஒதுக்கப்பட்ட 03 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக விநியோகிக்க நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் ப.நோ.கூ.ச எரிபொருள் நிலையம்.
திருநெல்வேலி ரட்ணம் எரிபொருள் நிலையம்.
கோப்பாய் ஏஎம்ரி எரிபொருள் நிரப்பு நிலையம்

10. வியாபார காரணங்களுக்காக எரிபொருள் கோரும் நிறுவனங்கள் யாவும் வணிகர் கழகத்தின் சிபாரிசினை பெற்றுக்கொண்டு குறித்த நிரப்பு நிலையங்கள் ஊடாக எரிபொருளை பெறுவதற்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

11. பிரதேச செயலாளர்கள் அவர்களின் பிரிவிற்குரிய கிராம உத்தியோகத்தர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் எரிபொருள் நிரப்புநிலைய முகாமைத்துவத்தினர் ஆகியோரை அழைத்து சரியான அறிவுறுத்தல்களை வழங்கி எரிபொருள் விநியோகத்தினை சீராக வழங்குமாறு தெரிவிக்கப்பட்டது.

12. டீசலுக்கான கோரிக்கையினை கிடைக்கும் எரிபொருள் அளவினைக் கருத்திற்கொண்டு பிரதேச செயலாளர்களே தீரமானித்து வழங்குமாறு தெரிவிக்கப்பட்டது.

மேற்படி கலந்துரையாடலில் மேலதிக மாவட்ட செயலாளர், மேலதிக மாவட்டச் செயலாளர் (காணி), சுகாதார சேவைகள் பணிப்பாளர், பிரதம கணக்காளர், பிரதேச செயலாளர்கள், உதவி மாவட்டச் செயலாளர் பெற்றோலிய கூட்டுத்தாபன பிராந்திய முகாமையாளர், பொலிஸ் அதிகாரி, போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர், மற்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்க பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More