தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கப்பல் மூலம் 16 ஆயிரத்து 800 தொன் அளவிலான நிவாரணப் பொருட்களை இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கொடியசைத்து அனுப்பி வைத்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு அங்குள்ள மக்களுக்கு உதவும் வகையில் தமிழகத்திலிருந்து அத்தியாவசிய பொருட்கள் அனுப்பப்படும் எனத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி சென்னை துறைமுகத்திலிருந்து கப்பல் மூலம் கடந்த மே மாதம் 18-ந் திகதி முதல் கட்டமாக இந்திய மதிப்பில் 30 கோடி மதிப்பிலான பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அந்த கப்பலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
இதன் தொடர்ச்சியாக 2-ம் கட்டமாகக் கடந்த மாதம் 22 ந் திகதி அன்று தூத்துக்குடி வ.உ.சி.துறைமுகத்திலிருந்து கப்பல் மூலம் இந்திய மதிப்பில் 67.70 கோடி ரூபாய் மதிப்பிலான 15 ஆயிரம் டன் எடையுள்ள பொருட்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டன. இந்நிலையில் இன்று தொடர்ந்து 3-வது கட்டமாக நிவாரண பொருட்கள் தூத்துக்குடி வ.உ.சி.துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
54 கோடி ரூபாய் மதிப்பிலான 16,500 தொன் அரிசி, 6 கோடி ரூபாய் மதிப்பிலான 250 தொன் ஆவின் பால் மா, 14 கோடி ரூபாய் மதிப்பிலான 50 தொன் உயிர் காக்கும் மருந்துகள் என இந்திய மதிப்பில், மொத்தம் 74 கோடி ரூபாய் மதிப்பிலான 16,800 டன் எடையுள்ள பொருட்கள் கப்பலில் ஏற்றப்பட்டு தயாராக இருந்தது. இதனை தொடர்ந்து நிவாரண பொருட்கள் ஏற்றப்பட்ட கப்பல் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து இன்று காலை 10 மணிக்கு கொழும்பு துறைமுகத்துக்கு புறபட்டு சென்றது.
இந்த கப்பலை, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி கொடியசைத்து அனுப்பிவைத்தார்.