குரங்கம்மை நோயை பொது சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. உலக அளவில் குரங்கம்மை பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து இதை உயரிய எச்சரிக்கையுடன் இருக்கும் நோய் பாதிப்பாக அந்த அமைப்பு வகைப்படுத்தியுள்ளது.
இன்று நடைபெற்ற தொற்று நோய்கள் தொடர்பான உலக சுகாதார அமைப்பின் இரண்டாவது அவசர கூட்டத்தின் முடிவில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
75 நாடுகளில் 16,000 க்கும் மேற்பட்ட குரங்கம்மை பாதிப்புகள் பதிவாகியுள்ளதாகவும் இதுவரை ஐந்து உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பின் அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானம் கேப்ரெயேசூஸ் தொிவித்துள்ளாா்.
உலக அளவில் தற்போது இதுபோன்ற இரண்டு சுகாதார அவசரநிலைகள் மட்டுமே அமுலில் உள்ளன – முதலாவதாக கொரோனா வைரசும், இரண்டாவதாக போலியோவும் உள்ளன.
குரங்கம்மை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு அவ்வளவு எளிதில் பரவாது; இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் அபாயம் என்பது மிகவும் குறைவு என வல்லுநர்கள் தொிவித்துள்ளனா்.
குரங்கம்மை பாதிப்புக்கு என்று தனியாக ஒரு தடுப்பூசி இதுவரை கிடையாது. பெரியம்மை தொற்றை உண்டாக்கும் வைரஸ் கிருமியை போன்றே குரங்கம்மையை உண்டாக்கும் வைரசும் இருப்பதால் பெரியம்மை தடுப்பூசி குரங்கம்மை பாதிப்பில் இருந்து 85 சதவிகிதம் வரை பாதுகாப்பு வழங்கும் எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது