யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த 06 பேர் கடல் வழியாக தமிழகத்திற்கு சென்று அகதி அந்தஸ்து கோரியுள்ளனர்.
தமிழகம் தனுஷ்கோடிக்கு அருகில் உள்ள கம்பிப்பாடு எனும் இடத்தில் இன்றைய தினம் புதன்கிழமை அதிகாலை கிளிநொச்சியில் வசித்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரும், யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவருமாக 06பேர் கொண்டு சென்று விடப்பட்டுள்ளனர்.
அது தொடர்பில் தகவல் அறிந்த கடலோர காவல் படை அவர்களை மீட்டு, மண்டபம் காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
விசாரணைகளின் போது , தாம் படகு ஒரு இலட்சத்து 50ஆயிரம் ரூபாய் கொடுத்து வந்ததாக தெரிவித்தனர்.
அதேவேளை இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக அத்தியவாசிய பொருட்களான அரிசி, பருப்பு, கோதுமை விலை அதிகரித்தள்ளது. அதே போல் டீசல் மற்றம் பெட்ரோல் விலையும் வெகுவாக உயர்ந்துள்ளது.
2 லிட்டர் மண்ணெய் வாங்க 4 நாட்கள் வரிசையில் நிற்கவேண்டியுள்ளது, தொடர் மின்வெட்டு, அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுபாடு உள்ளது.
மேலும் ஒரு மூட்டை சீமெந்து 3500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் கட்டுமான தொழில் பாதிக்கப்பட்டு கூலி வேலைக்கு செல்ல முடியாததால் வாழ வழியின்றி வந்ததாக தெரிவித்துள்ளனர்.
பொருளாதார நெருக்கடியை காரணம் காட்டி, கடந்த மார்ச் மாதம் 22ந் திகதி முதல் இன்று வரை இலங்கையில் இருந்து 129 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.