ஹம்பாந்தோட்டை துறைமுகம் நோக்கி பயணித்துக்கொண்டிருக்கும் சீன கப்பல் தொடர்பில் விவாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இந்த பிராந்திய போட்டியில் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சீனாவின் ஆய்வுக் கப்பலான Yuan Wang 5 எனும் கப்பல் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அண்மிக்கவுள்ளதாக Reuters செய்தி வெளியிட்டுள்ளது.
சீனாவின் சியாங் துறைமுகத்திலிருந்து கடந்த 13 ஆம் திகதி பயணத்தை ஆரம்பித்த கப்பல், சீனாவின் கிழக்கு கடலில் தற்போது பயணித்துக்கொண்டிருக்கிறது.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு சென்று, வசதிகளை ஏற்படுத்திக்கொண்டதன் பின்னர் குறித்த கப்பல் இந்திய பெருங்கடலில் ஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனிடையே, இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் தாக்கம் செலுத்தும் சகல விடயங்கள் தொடர்பிலும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுவதாக இந்தியா தெரிவித்துள்ளது.
பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்வதற்கு எந்தவொரு நடவடிக்கையையும் எடுப்பதற்கு தயாராக இருப்பதாக இந்திய வெளிவிகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சட்டபூர்வமான கடல்சார் நடவடிக்கைகளில் “சம்பந்தப்பட்ட தரப்பினர்” தலையிட மாட்டார்கள் என எச்சரிக்கிறது சீனா!
தனது நாட்டின் சட்டபூர்வமான கடல்சார் நடவடிக்கைகளில் “சம்பந்தப்பட்ட தரப்பினர்” தலையிட மாட்டார்கள் என சீனா நேற்று (29.07.22) தெரிவித்துள்ளது.
அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு சீனக் கப்பல் செல்லத் திட்டமிடப்பட்டுள்ளதை அறிந்துள்ளதாகவும், அதனை அவதானித்து வருவதாகவும் இந்திய அதிகாரிகள் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் சீனா இதனைத் தெரிவித்துள்ளது.
“யுவான் வாங் 5” என்ற ஆராய்ச்சி மற்றும் ஆய்வுக் கப்பல் தற்போது ஹம்பாந்தோட்டை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாக ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
இந்த கப்பல் ஒகஸ்ட் 11 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அடையவுள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில், “பாதுகாப்பு மற்றும் பொருளாதார விடயங்களில் இந்தியா அக்கறை கொண்டுள்ளது. என்ன நடக்கிறது என்பதை அரசு கண்காணித்து வருகிறது. பாதுகாப்பு மற்றும் பொருளாதார விடயங்களில் ஏதேனும் பாதிப்பு இருந்தால், அவற்றைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை இந்தியா எடுக்கும்.” என குறிப்பிட்டிருந்தார்.