யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் பேருந்துகளில் அலைபேசி திருட்டில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு உள்ளதுடன் அவர்களிடம் இருந்து சுமார் 15 இலட்ச ரூபாய் பெறுமதியான 45 அலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்னர்.
யாழ்ப்பாணத்தில் கடந்த 3 மாத கால பகுதியாக அலைபேசி திருட்டுக்கள் தொடர்பில் அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று வந்த நிலையில் , அது தொடர்பில் யாழ்ப்பாண தலைமையக காவல்நிலைய குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.
விசாரணைகளின் அடிப்படையில் யாழ்ப்பாணம் நாவற்குழி மற்றும் அரியாலை பகுதிகளை சேர்ந்த 23 , 24 மற்றும் 27 வயதுடைய மூன்று சந்தேக நபர்களை நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.
விசாரணைகளின் அடிப்படையில் சந்தேக நபர்கள் கூறிய தகவலின் பிரகாரம் , சுமார் 3 இலட்ச ரூபாய் பெறுமதியான ஐ போன் உட்பட 45 அலைபேசிகளை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
அதேவேளை ,போதைக்கு அடிமையானதால் , தமக்கு அதிகளவான பணம் தினமும் தேவைப்பட்டதால் , திருட்டில் ஈடுபட்டு வந்ததாகவும் யாழ்.போதனா வைத்திய சாலை மற்றும் பேருந்துக்களில் அலைபேசியை திருடி வந்ததாகவும் காவல்துறையினரிடம் வாக்கு மூலம் அளித்துள்ளனர்.
அலைபேசிகள் திருட்டு போயிருந்தால் , உரியவர்கள் யாழ்ப்பாண காவல்நிலையத்திற்கு வந்து தமது அலைபேசியை அடையாளம் காட்டுமாறு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.