நுணாவில் மேற்கு கமக்கார அமைப்பு பெரும்போக நெற்பயிற்செய்கைக்காக தமக்கான டீசல் தேவை குறித்ததான கோரிக்கையினை நுணாவில் ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளரிடம் முன்வைத்ததை அடுத்து அவர்களுக்கான டீசல் விநியோகிக்கப்பட்டது.
இது தொடர்பி நுணாவில் ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளர் தெரிவிக்கையில்,
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பொருளாதாரத்தின் முதுகெலும்பாக காணப்படும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.
அவர்களுக்கான எரிபொருளினை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்தும் பெற்றுக்கொடுக்க வேண்டும்.
நாம் முதல்கட்டமாக எம்மிடம் நுணாவில் மேற்கு கமக்கார அமைப்பு பெரும்போக நெற்பயிற்செய்கைக்காக டீசல் தேவை என கோரிக்கையினை முன்வைத்திருந்தனர் அதற்கமைவாக இன்றைய தினம் நுணாவில் மேற்கு கமக்கார அமைப்பினால் ஒழுங்குபடுத்தப்பட்ட உழவு இயந்திரங்களுக்கு டீசலை வழங்கியிருந்தோம் என தெரிவித்தார்.
அதேவேளை டீசலை பெற்றுக்கொண்டமை தொடர்பில், நுணாவில் மேற்கு கமக்கார அமைப்பின் தலைவர் தெரிவிக்கையில்,
விவசாயிகளாகிய நாம் விவசாய நடவடிக்கைகளுக்காக எரிபொருளினை பெற்றுக்கொள்வதற்கு நீண்ட நாட்களாக வரிசை நிற்கின்றோம். வரிசையில் நின்றும் எமக்கு தேவையான எரிபொருட்கள் கிடைக்கவில்லை. இதற்கமைய நுணாவில் மேற்கு கமக்கார அமைப்பினராகிய நாம் ௭ழுத்து மூலமாக எமக்கான எரிபொருள் தேவையினை நுணாவில் ஐ.ஓ.சி எரிபொருளின் நிலையத்தின் உரிமையாளரிடம் கோரியிருந்தோம்.
அவர் எந்தவித மறுப்புமின்றி எமக்கான எரிபொருளினை இன்றைய தினம் தந்துதவினார். அதற்கு உரிமையாளருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். என்றும் தொடர்ச்சியாக எமது விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு எரிபொருளினை தந்துதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.