வீட்டை எரித்துவிட்டு ரணில் கோ ஹோம் என்று கோஷம் எழுப்புவதால் எவ்வித பயனும் இல்லை என்றும் தயவு செய்து அவ்வாறு செய்ய வேண்டாம் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
ஏனெனில் தனக்கு வீடு இல்லை என்றும் வீடு இல்லாமல் இருப்பவரை வீட்டுக்கு போகச்சொல்வதில் அர்த்தம் இல்லை எனவும் தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க, போராட்டகாரர்கள் தயார் எனில் பெருந்திரளான மக்களை கொண்டு வந்து தனது வீட்டை கட்டிக் கொடுக்குமாறும் அதன்பின்னர், வீட்டுக்கு அருகில் வந்து ரணில் வீட்டுக்கு போ என்று சொல்லுமாறும் தெரிவித்துள்ளார்.
கண்டி தலதா மாளிகை சென்ற ஜனாதிபதி, மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களையும் இன்று (30.07.22) சந்தித்திருந்தார்.
அதன் பின்னர், கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்த ஜனாதிபதி , சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க ஒன்றிணையுமாறு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
நாட்டின் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு சர்வகட்சி அரசாங்கமே சிறந்த வழி என்றும் அதில் ஒன்றிணையுமாறும் அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.