யாழ்ப்பாணம் வல்லை பாலத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் – கார் விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வல்லை பாலத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை இடம்பெற்ற குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரே காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழில் பெய்து வரும் மழை காரணமாக குறித்த பாலத்தில் வழுக்கும் தன்மை காணப்பட்டமையால் பாலத்தில் பயணித்த கார் வேக கட்டுப்பாட்டை இழந்து எதிரே மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் மீது மோதியதாக விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை விபத்தினை ஏற்படுத்திய கார் பாலத்தில் இருந்து விழுந்த போதிலும் சாரதி காயங்கள் இன்றி தப்பியுள்ளார்.
யாழில் வல்லை மற்றும் கோப்பாய் பாலங்கள் இரும்பில் அமைக்கப்பட்டுள்ளமையால் மழை காலங்களில் குறித்த இரு பாலங்களிலும் அதிகளவான விபத்து சம்பவங்கள் ஏற்பட்டு வருகின்றன.
பாலத்தின் மேல் உள்ள இரும்பு தகரங்களில் உராய்வை அதிகரிக்கும் நோக்குடன் தார் படுக்கைகள் போடப்பட்டாலும் அவை இரும்பு தகரங்களில் ஒட்டிக்கொள்ளாது படையாக கிளம்பி சிறிது காலத்தில் காணாமல் போய்விடும்.
எனவே குறித்த இரு பாலங்களிலும் இடம்பெறும் விபத்து சம்பவங்களை தடுப்பதற்கு ஏதுவான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட தரப்பினர் எடுக்க வேண்டும் என பலரும் கோரியுள்ளனர்.