Home இலங்கை போராடுவோருடன், வெளிப்படைத் தன்மையுடன் பணியாற்றத் தயார்!

போராடுவோருடன், வெளிப்படைத் தன்மையுடன் பணியாற்றத் தயார்!

by admin

ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் இளைஞர்களுடன் இணைந்து வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட தான் தயார் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையர்கள் இப்போது பொருளாதாரப் போராட்டத்தில் வெற்றிபெற வேண்டும் என்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி விக்கிரமசிங்க அந்தப் பொருளாதாரப் போராட்டத்தின் வெற்றிக்கு போராட்டக் களத்தில் உள்ள அனைத்து இளைஞர், யுவதிகளையும் சகல வழிகளிலும் பங்கேற்கச் செய்ய தாம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் பல தரப்பினருக்கும் இடையில் நேற்று (05) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

ஜனநாயக விரோத அரசியலையும் வன்முறையையும் தாம் எதிர்ப்பதாகவும், ஒடுக்குமுறைக்காகவே செயற்படுபவர்கள், பல்கலைக்கழக செயற்பாட்டின் ஊடாக பகிடிவதையை நிறுத்தி சிறந்த சமூக ஜனநாயகத்துக்காக முன்வர வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இன்று நமது பல்கலைக்கழகக் கட்டமைப்பு சீர்குலைந்து இருப்பதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்று பகிடிவதை ஆகும். வேலைநிறுத்தங்கள் எல்லா காலத்திலும் தொடர்ந்தன.

வேலைநிறுத்தங்கள் மூலம் ஒரு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என்றும், பேச்சுவார்த்தை மூலம் மத்தியஸ்த நிலைக்கு வந்து கோரிக்கைகளை பெற்றுக்கொள்வதைப் போன்று, நாட்டுக்காக செய்ய வேண்டிய பணிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அனைத்து ஆர்ப்பாட்டக்காரர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான குழுவொன்றை உருவாக்குமாறு கூறிய ஜனாதிபதி, அக்குழுவிற்கு அனைத்து மதங்களின் பிரதிநிதித்துவம் மற்றும் பெண்களின் பிரதிநிதித்துவம் அவசியமானது எனவும் குறிப்பிட்டார்.

இளைஞர்களின் தேவைகளுக்காக அரச அனுசரணையுடன் செயற்படுத்துவதற்கு, கொழும்பு கோட்டை மிதக்கும் சந்தை மற்றும் பல்வேறு இடங்களை முன்மொழிய தான் விரும்புவதாகத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அது தொடர்பில் முறையான ஆலோசனைகளை பெரும்பான்மையான ஆர்ப்பாட்டக்காரர்களின் பங்களிப்புடன் தயாரித்து கையளிக்குமாறும் தெரிவித்தார்.

அந்தச் செயற்பாட்டில், கல்விக்கான நூலகங்கள், அரசியல் கல்விக்கான வசதிகள், இசை, கலை, நாடகம் போன்ற இளைஞர்களின் திறன்கள் மற்றும் தேவைகளை பூர்த்தி செய்யும் ஒரு மத்திய நிலையமாக அது உருவாக்கப்பட வேண்டுமென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அவசரகால நிலையை முடிந்தவரை விரைவில் நீக்குவது நாட்டின் பொருளாதார மற்றும் சமூக ஸ்திரத்தன்மைக்கு முக்கியமாக இருப்பதைப்போன்று, தற்போதுள்ள நிலைமைகள் காரணமாக நாட்டின் நிர்வாகத்திலும் அதன் தாக்கம் இருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

தற்போது LGBT சமூகம் தொடர்பில் அவசரகாலச் சட்டம் காரணமாக பிரச்சினைக்குரிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக தமக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை நீக்குவதற்கு தேவையான சட்டப் பின்னணியை தயார் செய்யுமாறு சட்டமா அதிபருக்கு அறிவித்துள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

மேலும், பொதுமக்கள் சபைகளை ஸ்தாபிப்பது தொடர்பில் ஏற்கனவே பல தரப்பினரிடமிருந்து முன்மொழிவுகள் தமக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அடுத்த வாரம் குறித்த வேலைத்திட்டம் தொடர்பில் உரிய தரப்பினருடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டக்காரர்களை பிரதிநிதித்துவப்படுத்தி வருகை தந்தவர்களின் கோரிக்கையானது, அமைதியான பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களை சட்ட விரோதமாகவோ அல்லது தன்னிச்சையாகவோ கைது செய்வதைத் தடுத்து நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்பதாகும்.

தற்போது எந்த தவறும் செய்யாது தளத்தில் இருக்கின்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் பலர் கைது செய்யப்படுவதால் அங்கிருந்து வெளியே செல்ல பயப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இப்போராட்டத்தின் மிகவும் கடினமான பகுதி தற்போது ஆரம்பமாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள், நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் சிந்தனைகளிலும் புரட்சி ஏற்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இளம் தலைமுறையினர் எல்லையற்ற அர்ப்பணிப்புடன் நாட்டிற்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தவே இந்தப் போராட்டத்தை முன்னெடுத்ததாகவும், அரசியலமைப்பு ரீதியில் சாதகமான பலனைப் பெறுவதே தமது எதிர்பார்ப்பு எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். கல்வி சீர்திருத்தங்கள் மற்றும் சமூக சீர்திருத்தங்கள் உட்பட நாட்டை முறையான மற்றும் ஸ்திரமான நிலைக்கு கொண்டு வர விரைவான சீர்திருத்த செயல்முறையை நிறுவ வேண்டும் என்றும் அவர்கள் பரிந்துரைத்தனர்.

நாட்டின் முன்னேற்றத்தை விரும்புவோரின் ஆர்ப்பாட்டத்தின் முன்னேற்றம் கலந்துரையாடல் மற்றும் பேச்சுவார்த்தை மூலம் செய்துகொள்ளப்படுகின்ற இணக்கப்பாடுகளில் அடங்கியுள்ளதாகவும், அதற்காக ஜனநாயக நடவடிக்கைகள் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியிலும் மேற்கொள்ளப்படும் என நம்புவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

போராட்டத்தின் மூலம் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் பல பெரிய வெற்றிகளை இளைஞர்கள் பெற்றுத் தந்தது தங்களது தலைமுறையின் தனிச்சிறப்பு என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். உலகம் முழுவதும் ஜனநாயகத்தைப் போற்றும் மக்களால் இந்தப் போராட்டம் மதிக்கப்படுதாகவும், அதன் காரணமாகவே நமது நாடு உலகின் கவனத்தைப் பெற்றதாகவும் அவர்கள் கூறினர்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More