முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு, ஜனாதி பொது மன்னிப்பு வழங்குவதற்கான பரிந்துரைகளை நீதி அமைச்சு சமர்ப்பித்துள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
அதற்காக சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற்றுள்ளதாக அமைச்சில் நேற்று (10.08.22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர், இவ்வாறான விடயத்தில் சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற வேண்டிய அவசியமில்லை. கொலைக்குற்றம் சாட்டப்பட்டவர் தொடர்பில் சட்டத்தின் பிரகாரம் ஆலோசனை பெற வேண்டும். ஆனால் இங்கு வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்தும் வகையில், தான் சட்டமா அதிபரின் ஆலோசனையை கேட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்பான சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தின் அறிக்கையையும் பெற்றுக்கொண்டதாகவும் அதில் அனைத்து தகவல்களை கருத்திற்கொண்டு நிபந்தனைக்குட்பட்டு ஜனாதிபதிக்கு பரிந்துரையை சமர்ப்பித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது பொதுவான வழக்கோ, குற்றமோ அல்ல எனவும் நீதிமன்ற அவமதிப்புக்காக ரஞ்சன் ராமநாயக்க நீண்ட நாட்களாக தண்டனையை அனுபவித்து வருவதாகவும், அவர் நல்ல நடத்தை உடையவர் என்பதாலும் சமூகத்திற்கு சில பங்களிப்பைச் செய்யக்கூடியவர் என்பதாலும் இந்த நேரத்தில் பொதுமன்னிப்பு வழங்குவது மிகவும் நியாயமானது என்று தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.