மன்னார் மருதமடு அன்னையின் ஆவணி மாத பெருவிழா இன்றைய தினம் திங்கட்கிழமை(15) காலை சிறப்பாக இடம்பெற்றது.
இன்று காலை 6.15 மணி அளவில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில்,அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நோபேட் அன்ராடி ஆண்டகை, கொழும்பு உயர் மறை மாவட்டத்தின் துணை ஆயர் அன்ரன் ரஞ்சித் பிள்ளை நாயகம் ஆண்டகை ஆகியோர் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலி யாக ஒப்புக்கொடுத்தனர்.
இந்த நிலையில் இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் அன்னையின் ஆசீர்வாதத்தை வேண்டி மடு திருத்தலத்திற்கு வருகை தந்தனர்.
திருவிழா திருப்பலியை தொடர்ந்து மடு அன்னையின் திருச்சொரூப பவனி இடம் பெற்ற தோடு மடு அன்னையின் ஆசி பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
கடந்த வருடம் நாட்டில் ஏற்பட்டிருந்த கோவிட் தொற்று காரணமாக ஆலயத்திற்கு செல்ல பக்தர்கள் மட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில் இந்த வருடம் அதிகளவான மக்கள் நேர்த்திக்கடன்களை நிறைவு செய்ய நடைபயணம் மேற்கொண்டு வருகை தந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.