போராட்டக்காரர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்த வேண்டாம் என இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ள சர்வதேச மன்னிப்புச் சபை பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.
மேலும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட செயற்பாட்டாளர்கள் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பது குறித்தும் சர்வதேச மன்னிப்புச் சபை கவலை வெளியிட்டுள்ளது.
அத்துடன் , போராட்டக்காரர்கள் மீது தன்னிச்சையான தடுப்புக்காவல் மற்றும் பயங்கரவாத குற்றச்சாட்டுகள் போன்ற நியாயமற்ற கடுமையான குற்றங்களை சுமத்துவது சர்வதேச சட்டத்திற்கு முரணானது என சர்வதேச மன்னிப்புச் சபை கூறியுள்ளது.
கடந்த 18 ஆம் திகதி இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது வசந்த முதலிகே உள்ளிட்ட 19 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களில் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், 15 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனா்.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே, ஹாஷாந்த ஜீவந்த குணத்திலக்க உள்ளிட்ட மூவர், 72 மணித்தியால தடுப்புக் காவல் உத்தரவின் பிரகாரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள காவல்துறை தலைமையகம் அவர்களைத் தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.