Home இலங்கை புலம்பெயர்ந்த தமிழர்களால் நாட்டை  நெருக்கடியிலிருந்து மீட்கமுடியுமா? நிலாந்தன்.

புலம்பெயர்ந்த தமிழர்களால் நாட்டை  நெருக்கடியிலிருந்து மீட்கமுடியுமா? நிலாந்தன்.

by admin

கடந்த இரு தசாப்தகால அனுபவத்தின்படி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் ஜனநாயகவெளி ஒப்பீட்டளவில் அதிகரிப்பதுண்டு. எனினும் இம்முறை அவர் அதிர்ஷ்டலாபச் சீட்டில் ஜனாதிபதியாக வந்ததும் தென்னிலங்கையில் ஜனநாயகவெளி ஒப்பீட்டளவில் சுருங்கியது எனலாம். மக்கள் எழுச்சிகளின் காரணமாக அந்த வெளி கடந்த மூன்று மாதங்களாக குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவுக்கு அதிகரித்துவந்தது. ஆனால் ரணில் அதைச் சுருக்கி விட்டார்.அரகலயவை முறியடிப்பதில் அவர் முதற்கட்ட வெற்றியைப்  பெற்றிருக்கிறார். அதனால் அவசரகாலச் சட்டத்தைத் நீக்கப்போவதாகக் கூறியிருக்கிறார். 

இவ்வாறு தென்னிலங்கையில் மக்கள் எழுச்சிகளின் விளைவாக அதிகரித்து வந்த ஜனநாயக வெளியைக் குறுக்கிய ஒருவர்,எப்படித் தமிழ்மக்களுக்கு ஜனநாயக வெளியை அதிகப்படுத்துவார் என்று எதிர்பார்ப்பது?ஆனால் தென்னிலங்கை நிலவரமும் தமிழ்ப் பகுதிகளின் நிலவரமும் ஒன்று அல்ல.  தென்னிலங்கையில் போராட்டத்தை தொடர்ந்து அனுமதித்தால் ரணில் தன்னுடைய ஆட்சியை பாதுகாக்க முடியாது. அதேசமயம் தமிழ் பகுதிகளில் அவ்வாறான போராட்டங்கள் எவையும் இடம்பெறவில்லை. மேலும் ஜெனிவாக் கூட்டத்தொடரை நோக்கி அவ்வாறு தமிழ் மக்களின் அரசியலில் ஜனநாயக வெளியை அதிகப்படுத்த வேண்டிய தேவை ரணிலுக்கு உண்டு.கடந்த நல்லாட்சி என்று அழைக்கப்பட்ட ஆட்சிக் காலத்தில் அவர் அதைச் செய்தார்.அவர் திறந்துவிட்ட அதிகரித்த ஜனநாயக வெளிக்குள்தான் தமிழ் மக்கள் பேரவை எழுச்சி பெற்றது, இரண்டு எழுக தமிழ்கள் இடம்பெற்றன.

இம்முறையும் அவர் அவ்வாறு தமிழ் மக்களுக்கு ஜனநாயக வெளியை அகலப்படுத்துவாரா என்று பார்க்க வேண்டும்.கடந்தவாரம் அவர் சில புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் மற்றும் தனி நபர்கள் மீதான தடைகளை அகற்றினார்.அதை அவர் நல்லாட்சி என்று அழைக்கப்பட்ட ஆட்சிக் காலத்திலும் செய்தார்.அதைவைத்து அவர் ஜனநாயக வெளியை அதிகப்படுத்துகிறார் என்று எடுத்துக் கொள்ளலாமா? இல்லை. ஏனென்றால் புலம்பெயர் தமிழர்கள்-தமிழ் டயஸ்பொறா- இப்பொழுது நாட்டுக்குத் தேவை. புலம்பெயர்ந்த தமிழர்கள் நாட்டில் முதலீடு செய்தால் நாட்டின் செல்வச்செழிப்பை அதிகப்படுத்தலாம்.நாடு இப்பொழுது எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுபடுவதற்கு புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகள் தேவை என்பதனை ரணில் மட்டுமல்ல கோட்டாபயவும் ஏற்றுக் கொண்டிருந்தார்.

தமிழ் டயாஸ்போற எனப்படுவது தட்டையான, ஒற்றைப்படையான ஒரு சமூகம் அல்ல. அதில் பல அடுக்குகள் உண்டு. இப்பொழுது தடை நீக்கப்பட்ட எல்லா அமைப்புகளும் நபர்களும் முழுத்தமிழ் டயஸ்போறவையும்  பிரதிபலிக்கிறார்களா என்ற கேள்வி உண்டு.மேலும்,ராஜபக்சவால் தடை செய்யப்பட்ட உலகத்தமிழர் அமைப்பின் தலைவரான மதகுரு யாழ்ப்பாணத்தின் தெருக்களில் லேடிஸ் பைசிக்கிளில் வழமைபோல நடமாடினார். அவர் விடயத்தில் தடை ஒரு நடைமுறையாகவே இருக்கவில்லை. எனவே தடை நீக்கமும் அவ்வாறு சம்பிரதாயபூர்வமானதா ?எதுவாயினும், ,இதுதொடர்பில்  புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் என்ன செய்ய வேண்டும்?

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி புலம்பெயர்ந்த தமிழர்கள் நாட்டில் முதலீடு செய்வதற்கு முண்டியடித்துக் கொண்டு வரத்தேவையில்லை. நிதானமாக முடிவெடுக்கலாம். இந்த அரசாங்கமும் ஒரு நாள் மாறும்.மாறும்போது எப்படி கோட்டாபய வந்ததும் ரணில் தடை நீக்கிய அமைப்புக்கள்,தனி நபர்கள் மீண்டும் தடை செய்யப்பட்டார்களோ,அப்படி இந்த நிலையும் மாறலாம். எனவே புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் ஆட்சி மாற்றங்களைக் கண்டு மயங்கத் தேவையில்லை. மாறாக இந்த சந்தர்ப்பத்தை வெற்றிகரமாகக் கையாண்டு எப்படி ஒரு அரசுக் கட்டமைப்பு மாற்றத்துக்கான பேரத்தைப் அதிகப்படுத்தலாம் என்று சிந்திக்க வேண்டும்.தமிழ் முதலீடுகளை நாட்டுக்குள் கொண்டு வருவது என்று சொன்னால் அதற்கு ஓர் அரசியல் சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும்.தமிழ் மக்களை நாட்டின் பொருளாதாரத்தில் பங்காளிகளாக ஏற்றுக் கொள்ளவேண்டும்.அதாவது தமிழ்மக்களை முதலீட்டாளர்களாக இணைப்பதற்கு பதிலாக தமிழ்மக்களை அரசியற்  பொருளாதாரப் பங்காளிகளாக இணைக்கவேண்டும்.அதற்கு முதலில் அரசியல் தீர்வு ஒன்று வேண்டும்.அரசுக்கட்டமைப்பில் மாற்றம் செய்யப்பட வேண்டும்.

இப்பொழுது முதலீடு செய்தவர்கள் சில ஆண்டுகளின் பின் அவற்றை திருப்பி எடுத்துக் கொள்ளும் ஒரு நிலைமை வரக்கூடாது. எனவே இனப்பிரச்சினைக்கு தீர்வு தரப்படாத ஒரு பின்னணிக்குள் புலம்பெயர்ந்த தமிழ் முதலீட்டாளர்கள் கண்ணை மூடிக்கொண்டு ரணிலின் அழைப்பை ஏற்கத்தேவையில்லை. பதிலாக இத்தருணத்தை பயன்படுத்தி ரணில் விக்ரமசிங்கவின் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்கலாம். ஒரு தீர்வை முதலில் கொண்டு வாருங்கள், அதற்குரிய நல்லெண்ண சூழலை முதலில் உருவாக்குங்கள். உதாரணமாக பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குங்கள்,கைதிகளை விடுதலை செய்யுங்கள், காணிகளை விடுவியுங்கள்,காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிவாரணத்தை வழங்குங்கள்.இவற்றின் மூலம் ஒரு நல்லெண்ண சூழலை பயமற்ற சூழலை ஏற்படுத்துங்கள்.அதைத்தொடர்ந்து அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளைத் தொடங்குங்கள். அதில் புலம்பெயர்ந்த தமிழர்களையும் பங்காளிகள் ஆக்குங்கள். ஒரு தீர்வு கிடைக்கட்டும். அதன் பின் நாங்கள் முதலீடு செய்கிறோம் என்று நிபந்தனை விதிக்கலாம்.

தமிழ்மக்கள் ஏன் புலம்பெயர்ந்தார்கள்? ஏனென்றால் நாட்டுக்குள் பாதுகாப்பு இல்லை என்பதனால்தான்.கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக தென்னிலங்கையில் தமிழ் மக்களின் சொத்துக்களை குறி வைத்து தாக்குதல்களை நடத்தப்பட்டன. அதுதான்  பின்னாளில் முஸ்லிம்களுக்கும் நடந்தது..தென்னிலங்கையில் சிங்களவர்கள் அல்லாத ஏனைய இனங்கள் நிதி ரீதியாக செழித்தோங்குவதைக் கண்டு சகிக்க முடியாத ஒரு கூட்டு மனோ நிலை சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதத்திடம் உண்டு. அது இப்பொழுது மாறிவிட்டதா?

அந்த மனநிலையின் விளைவாகத்தான் தமிழ் மக்கள் நாட்டின் பொருளாதாரத்தில் பங்களிக்காத ஒரு நிலை அதிகரித்தது.ஆனால் புலப்பெயர்ச்சியானது சிங்கள பெருந்தேசியவாதம் கற்பனை செய்ய முடியாத வேறு ஒரு வளர்ச்சியை ஏற்படுத்திவிட்டது.புலம்பெயர்ந்து சென்ற சென்ற தமிழர்கள் புலம்பெயர்ந்து சென்ற நாடுகளில் மிக விரைவாக தங்களை ஸ்தாபித்துக் கொண்டார்கள்.நிதி ரீதியாக செழித்தோங்கினார்கள்.சில தசாப்தங்களுக்கு முன்பு ரூபாய்களோடு முதலாளிகளாக காணப்பட்டவர்கள்,புலம்பெயர்ந்த பின் டொலர்களை விசுக்கும் பெரு வணிகர்களாக மாறினார்கள்.எந்தத் தமிழர்களை தென்னிலங்கையில் இருந்து அகற்றவேண்டும் என்று திட்டமிட்டு இன அழிப்பு முன்னெடுக்கப்பட்டதோ, அதே தமிழர்கள் இப்பொழுது கொழும்புக்கு திரும்பி வந்து தனது டொலர்களால் காணிகளையும் கட்டிடங்களையும் விலைக்கு வாங்குகிறார்கள். சிங்கள மக்கள் விற்கும் காணிகளை வாங்கி அங்கெல்லாம் அடுக்குமாடித் தொடர்களைக் கட்டி வருகிறார்கள். இங்கே ஒரு உதாரணத்தைச் சுட்டிக்காட்ட வேண்டும்.

எதிரிசிங்க குரூப் ஒஃப் கொம்பனி என்று அழைக்கப்படும் ஒரு பிரம்மாண்டமான வணிக நிறுவனம் தென்னிலங்கையில் வந்துரோத்து நிலையை அடைந்தது. நூற்றுக்கணக்கான நகைக்கடைகள், சுவர்ணவாகினி என்று அழைக்கப்படும் ஊடக நிறுவனம் போன்றவற்றைச் சொந்தமாக கொண்டிருந்த எதிரிசிங்க குரூப் ஒஃப் கொம்பனி வங்குரோத்தானபோது அதை புலம்பெயர்ந்து வாழும் ஒரு தமிழ் பெரு வணிகர் விலைக்கு வாங்கினார். அவர் ஏற்கனவே ஒரு ஊடகப் பெரு வணிகரும் ஆவார். இவ்வாறு தென்னிலங்கையில் வங்குரோத்தாகும் கொம்பனியை விலைக்கு வாங்கும் அளவுக்கு தமிழ் மக்கள் நிதி ரீதியாகப் பலம் மிக்கவராக காணப்படுகிறார்கள். புலப்பெயர்ச்சி தமிழ் மக்களை ஒரு விதத்தில் சிதறடித்திருக்கிறது.இன்னொரு விதத்தில் உலகில் மிகவும் கவர்ச்சியான,பலம்வாய்ந்த ஒரு டயஸ்பொறவை உருவாக்கியிருக்கிறது.இந்த வளர்ச்சியை சிங்களபௌத்த பெருந்தேசியவாதம் கணித்திருக்கவில்லை.அதன் விளைவாகத்தான் புலம்பெயர்ந்த தமிழர்களை நாட்டில் முதலீடு செய்யுமாறு கோட்டாவும் கேட்டார். இப்பொழுது ரணிலும் கேட்கிறார்.

மேலும் ஜெனிவாவில் அரசாங்கத்துக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுப்பது புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள்தான். எனவே அவர்களோடு சுமுகமான உறவை வைத்துக் கொள்வதன்மூலம், அரசாங்கம் ஜெனிவாவில் தனக்கு ஏற்படக்கூடிய நெருக்கடியின் அளவைக் குறைக்கலாம்.

ஆனால் எதுகாரணமாக தமிழ்மக்கள் நாட்டின் பொருளாதாரத்தில் முழு அளவுக்குப் பங்களிக்க முடியாத ஒரு நிலை ஏற்பட்டதோ,அக்காரணங்களை அகற்ற ரணில் விக்ரமசிங்க தயாரா என்ற கேள்விக்கு விடை இல்லாமல் புலம்பெயர்ந்த தமிழர்கள் நாட்டில் முதலீடு செய்ய முன்வரக்கூடாது. அதுபோலவே ஜெனிவாவில் அரசாங்கத்தின் மீது நெருக்கடியைப் பிரயோகிக்கும் செய்முறைகளையும் நிறுத்தக்கூடாது.

இந்தவிடயத்தில் புலம்பெயர்ந்த தமிழர்கள் முதலில் ஓர் அமைப்பாகத் திரள வேண்டும். அதன்பின் அந்த அமைப்பானது அனைத்துலகை வழமைகளின் ஊடாக அரசாங்கத்தோடு தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளலாம்.அப்பொழுது இனப்பிரச்சினைக்கான தீர்வை ஒரு முக்கிய முன் நிபந்தனையாக முன் வைக்கலாம். தனித்தனி அமைப்பாக தனிநபர்களாக அரசாங்கத்தோடு டீல் களுக்குப் போவதற்கு  பதிலாக ஒரு அமைப்பாகத்  திரண்டு அதைச் செய்ய வேண்டும்.குறிப்பாக ரணில் விக்ரமசிங்க டயஸ்போறாவை பிரித்துக் கையாள வாய்ப்பளிக்கக்கூடாது.

நாட்டுக்குள் முதலீடு செய்வது என்பது இலங்கைத்தீவின் பொருளாதாரத்தில் டயஸ்பொறா ஒரு பங்காளிகளாக மாறுவது என்ற பொருளில் அல்ல.அதைவிட ஆழமானபொருளில் ,தமிழ்த்தேசத்தைக் கட்டியெழுப்புவது என்ற நீண்ட கால நோக்குநிலையிருந்தே திட்டமிடப்படவேண்டும்.அதாவது முதலீட்டின் மூலம்   தேசத்தைக் கட்டியெழுப்புவது.யூதர்கள் கடந்த நூற்றாண்டில் அவ்வாறு முதலீட்டின்மூலம் ஒரு தேசத்தை-இஸ்ரேலைக்-  கட்டியெழுப்பினார்கள்.எனவே புலம்பெயர்ந்த தமிழ்மக்கள் இலங்கைத்தீவின் பொருளாதாரத்தில் பங்காளிகளாவது என்று சொன்னால்,அதைத் தமிழ்த் தேசத்தைக் கட்டியெழுப்புவது என்ற உள்நோக்கத்தோடு திட்டமிடவேண்டும். 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More