மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரஸாக்குக்கு எதிரான ஊழல் முறைகேடு மேல்முறையீட்டு வழக்கில் அவருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கீழமை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மலேசிய உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.
இது தொடா்பில் நஜிப் ரஸாக் தாக்கல் செய்த இறுதி மேல்முறையீட்டு மனுவில் தனக்கு விதிக்கப்படும் தண்டனையை நிறுத்தி வைக்குமாறு நஜிப் சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை இன்று உச்ச நீதிமன்றம் நிராகரித்து விட்டது.
69 வயதாகும் நஜிப் ரஸாக், அவா் பிரதமராக பதவி வகித்த போது எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் எனும் நிறுவனத்திடமிருந்து சுமார் $10 மில்லியனை சட்டவிரோதமாகப் பெற்றதாக 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடரப்பட்ட வழக்கில் அவரை குற்றவாளி என்று கீழமை நீதிமன்றம் அறிவித்தது. அந்த வழக்கில் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள நஜீப் ரஸாக், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்திருந்தார்.
அந்த வழக்கில் தாம் குற்றமற்றவர் என்ற வாதத்தை நஜிப் முன்வைத்திருந்தார். எனினும் ,கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதிப்படுத்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி தெங்கு மைமுன் துவான் மாட் தலைமையிலான அமர்வு, நஜிப் ரஸாக் 12 ஆண்டுகள் சிறை தண்டனையும் 210 மில்லியன் ரிங்கிட் ($46.84 மில்லியன்) அபராதமும் விதித்துள்ளது.
நஜிப் உடனடியாகவே சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும். முன்னாள் பிரதமர் ஒருவர் மலேசியாவில் சிறையில் அடைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது