பாகிஸ்தானின் பல்வேறு இடங்களில் தொடர் கனமழை, வெள்ளப்பெருக்கு காரணமாக அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் இதுவரை அங்கு 343 குழந்தைகள் உட்பட 937 பேர் பலியாகியுள்ளதாகவும், 3 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது
பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளம் குடியிருப்பு பகுதிகளுக்கும் புகுந்ததால் ஏராளமான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் வெள்ளத்தில் சிக்கியும், வீடுகள் இடிந்து விழுந்தும், பல மக்கள் பலியாகி வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த ஜூன் மாதம் 14-ம் திகதியில் இருந்து தற்போது வரை பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு உள்ளிட்ட இடர்பாடுகளில் சிக்கி இதுவரை 343 குழந்தைகள் உள்ளடங்கலாக 937 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையகம் தெரிவித்துள்ளது.
மீட்பு படையினரும் தொடர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் கடுமையான மழைக்கு மத்தியில் மீட்பு பணியில் ஈடுபட முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது.
. இந்த நிலையில் தொடர் கனமழை காரணமாக பாகிஸ்தானில் தேசிய அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக ஏற்பட்டுள்ள பெருத்த சேதங்களை கட்டுப்படுத்த இத்தகைய சூழல் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.