நல்லூர் ஆலய வருடாந்திர மகோற்சவம் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை கொடியிறக்கத்துடன் நிறைவுற்ற நிலையில் நேற்றைய தினம் சனிக்கிழமை பூங்காவன திருவிழாவான முருகனின் திருக்கல்யாணம் நடைபெற்றது.
மாலை இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து முருகனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.
அதன் போது, தினைப்புனம் காவல் புரியும் வள்ளியை காந்தர்வ மணம் செய்ய தமையனான விநாயகருடன் முருகப்பெருமான் தினைப்புனத்திற்கு எழுந்தருளி, வள்ளியை காந்தர்வ முறையில் மணம்புரிவார்.
இவ்விடயத்தை அறிந்த தெய்வயானைத் தேவியானவர் கோபத்தால் வாயில் கதவை மூடி கோபம் புரிவார்.
வள்ளியுடனும் விநாயகருடனும் வெளிவாசலில் நின்ற முருகப்பெருமான் அச்சமயத்தில் திருநல்லூர் ஏசல் பாடல் பாடி தன்னருளால் திருக்கதவின் தாள் திறந்து, தெய்வயானையின் மனத்தில் அவரால் உருவாக்கப்பட்ட பொய்யூடல் மறையச் செய்யப்படும்.
பின்பு, தெய்வயானைத் தேவி வெளியே வந்து முருகப்பெருமானால் மாலைமாற்றப்பட்டவராக, தன்தங்கையான வள்ளியை ஏற்று உள்வீதிவலத்துடன் வசந்தமண்டபத்துக்கு ஆனந்த கோலாகலமாக மீள்வர்.
இந்நிகழ்வை சித்தரிக்கும் முகமாக பூங்காவன திருவிழா நடைபெற்றது.