ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வு தொடர்பாக இலங்கைக்கு ஆதரவாக சீனத் தூதுவர் வெளியிட்டுள்ள கீச்சக (டூவீட்டர்) பதிவை மீள பெற வேண்டும் என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஊடகவியலாளர்களை மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் சந்தித்தனர். அதன் போது கருத்து தெரிவிக்கையிலையே அவ்வாறு தெரிவித்தனர். மேலும் தெரிவிக்கையில்,
அரசினால் மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பு யுத்தத்தின் போது தமிழர்கள் அனுபவித்த துன்பங்களை சீனா நன்கு அறிந்திருக்கிறது.
இலங்கையைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) பாரப்படுத்துவதன் மூலம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நீதியைப் பெறுவதே எமக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை.
நேற்றைய தினம்தான் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சிகள், மதத் தலைவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள், சிவில் சமூகம், தொழிற்சங்கங்கள் மற்றும் நாம் கூட்டாக இணைந்து இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரப்படுத்துமாறு ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு கடிதம் அனுப்பியிருந்தோம்.
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்குமாறு ஐ.நா மனித உரிமை ஆணையத்தை வலியுறுத்தும் கடிதத்தை தமிழர்கள் ஐக்கியமாக அனுப்பிய அதே நாளில், சீனத் தூதுவர் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஆதரவாக ருவீட் செய்துள்ளார்.
சீனத் தூதரகத்தின் குறித்த கருத்தானது இலங்கையில் தமது ஆதிக்கத்தை பலப்படுத்துவதாக அமைந்துள்ளது. அதனால்தமிழ் மக்கள் விரோத மனப்பான்மை கொண்டுள்ள சீனாவின் ஆதிக்கம் வடக்கு கிழக்கில் அதிகரித்து வருவதை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.
ஆகவே இலங்கைக்கான சீன தூதரகம் தாங்கள் டுவிட்டரில் வெளியிட்ட உள்ளடக்கத்தை திரும்பப் பெறுமாறு சீனத் தூதரை நாங்கள் வலியுறுத்துவதுடன், மேலும் வரவிருக்கும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கும் எங்கள் அழைப்பை ஆதரிக்குமாறும் அவரை வலியுறுத்துகிறோம் என தெரிவித்தனர்.