ஜப்பான் நாட்டின் உதவியை பெற முடியாது முட்டுக்கட்டை போட்டது மத்திய அரசே , அரசியல் காழ்ப்புணர்ச்சியை முதல்வர்கள் மீதோ , மாநகர சபை நிர்வாகம் மீதோ வசை பாடாமல் , மத்திய அரசின் செயலுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என யாழ்.மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன் தெரிவித்துள்ளார்.
ஜப்பான் அரசாங்கம் யாழ்.மாநகர சபைக்கு கழிவகற்றல் வாகன இறக்குமதி செலவுக்கு என வழங்கிய பணத்தினை மீள கையளிக்குமாறு கோரியுள்ளமை தொடர்பில் யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
ஜப்பான் அரசாங்கத்தினால் யாழ்ப்பாண மாநகர சபைக்கு தின்ம கழிவகற்ற ஜப்பான் நாட்டில் பாவிக்கப்பட்ட நவீன ரக கழிவகற்றல் வாகனத்தை வழங்க கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19 ஆம் திகதி அப்போதைய யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட்டுடன் ஒப்பந்தம் கைச்சாட்டு இடப்பட்டது.
அந்த வாகனத்தை ஜப்பான் நாட்டில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்கான செலவு , வரிகள் மற்றும் மாநகர சபைக்கு கொண்டு வந்து சேர்ப்பதற்கான செல்வது என 83 ஆயிரத்து 432 அமெரிக்கன் டொலர் பணம் மாநகர சபைக்கு கையளிக்கப்பட்டது.
அதனை அடுத்து வாகனத்தினை இலங்கைக்குள் கொண்டுவருவதற்கு மத்திய அரசின் பல்வேறு தரப்புகளுடனும் பேசி எந்த பயனும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் 2019ஆம் ஆண்டு 06ஆம் மாதம் 12ஆம் திகதி இறக்குமதி கட்டுப்பாட்டு சபைக்கு கடிதம் மூலம் வாகனத்தை இறக்குமதி செய்ய அனுமதி கோரினோம்.
அவர்கள் எமக்கான அனுமதியை தரவில்லை மீண்டும் 18ஆம் திகதி இறக்குமதி செய்வதற்கு உரிய படிமுறைகள் அடிப்படையில் இறக்குமதி சான்றிதழுக்கு விண்ணப்பித்தோம்.
நீண்ட இழுபறியில் பின்னர் 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14ஆம் திகதி இறக்குமதி செய்வதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. அது மூன்று மாத கால பகுதிக்கே செல்லுபடியாகும். அதற்கு இறக்குவதற்கான மற்றைய அனுமதிகள் கிடைக்க தாமதமானதால் , இறக்குமதி சான்றிதழ் 2020ஆம் ஆண்டு 2மாதம் 17ஆம் திகதியுடன் காலாவதியானது. அதன் காலாவதி திகதியை நீடித்து தருமாறு கோரிய போது அதற்கு இறக்குமதி கட்டுப்பாட்டு சபை மறுத்தது.
பின்னர் திறைசேரிக்கு கடிதம் அனுப்பினோம். மாநகர சபைக்கு வாகனம் கொண்டு வருவதற்கு ஜப்பான் அரசாங்கம் அனுப்பிய பணத்தினை திறைசேரிக்கு பாரப்படுத்துறோம். நீங்கள் அந்த பணத்தினை வைத்து எமக்கு வாகனத்தினை இறக்கி தாருங்கள் என கோரினோம். அதற்கு அவர்களிடம் இருந்து எந்த பணமும் வரவில்லை.
பிறகு அமைச்சரவை பாத்திரம் தாக்கல் செய்வதன் ஊடாக முயற்சிப்போம் என அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து அதனை தாக்கல் செய்தோம். பயனில்லை
இறுதியாக யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தன்னை சந்திக்கும் இராஜ தந்திரிகளிடம் வாகனத்தினை இறக்க முடியாத நிலைமை குறித்து எடுத்து கூறி இராஜதந்திர ரீதியாக முயற்சிகளையும் முன்னெடுத்தோம். அதுவும் பயனற்று போனது.
இந்நிலையிலையே , ஜப்பான் அரசாங்கம் தமது திட்டமானது மூன்று கால பகுதிக்குள் நிறைவேற்றப்பட வேண்டியது. மூன்று வருடங்கள் கடந்தும் நிறைவேற்றப்படவில்லை. யாழ்.மாநகர சபையும் தன் சக்திக்கு மேலாக பல முயற்சிகளை எடுத்தமையை நாம் அறிவோம். நாமும் மத்திய அரசுடன் இது தொடர்பில் பேச்சுக்களை நடாத்தினோம். எந்த பயனும் இல்லை எனவே ஒப்பந்தத்தை முடிவுறுத்துகிறோம். வாகன இறக்குமதி செலவாகாக மாநகர சபைக்கு வழங்கிய 83 ஆயிரத்து 432 அமெரிக்கன் டொலர் பணத்தை மீள செலுத்துமாறு கோரியுள்ளார்கள்.
இந்த விடயத்தில் முன்னாள் முதல்வர் ஆர்னோல்ட்டையோ , தற்போதைய முதல்வர் மணிவண்ணனையோ அல்லது மாநகர நிர்வாகத்தையோ குறை கூறவோ , குற்றம் சாட்டவோ முடியாது முடியாது.
இது முழுக்க முழுக்க மத்திய அரசாங்கத்தின் முட்டுக்கட்டையால் ஏற்பட்டது. தமது தலையீடு இன்றி வெளிநாடுகளோ , வெளிநாட்டில் வசிப்போரோ எவரும் மாகாணங்களுக்கு நேரடியாக உதவ விடக்கூடாது எனும் குறுகிய சிந்தனையில் செயற்படுகின்றார்கள்.
இவ்வாறான நிலையில் புலம்பெயர் அமைப்புக்கள் சிலவற்றின் தடைகளை நீக்கி , அவர்களை இலங்கையில் வந்து முதலீடு செய்யுமாறு அரசாங்கம் கோருகின்றதை பார்க்கும் போது நகைப்பாக உள்ளது.
ஏனெனில் ஜப்பான் நாட்டினால் வழங்கப்பட்ட உதவிகள் தமிழர் தேசத்திற்கு கிடைக்க கூடாது என சிந்திப்பவர்கள் எவ்வாறு புலம் பெயர் தேசத்தவர்கள் தமிழர் தேசத்தில் முதலீடு செய்ய அனுமதிப்பார்கள் ??
யாழ்.மாநகர முதல்வர் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின் போது பல்வேறு தரப்புக்களை சந்தித்த போது , பலரும் தமிழர் தேசத்திற்கு உதவ , தேசத்தில் முதலீடு செய்ய விருப்பம் கொண்டுள்ளதாக தெரிவித்தனர்.
ஆனால் அரசாங்கம் தமிழர் தேசத்தில் புலம்பெயர் தமிழர்கள் முதலீடு செய்வோ , உதவிகளை செய்யவோ குறுகிய அரசியல் சிந்தனையுடன் தடைகளை ஏற்படுத்துவார்களாக இருந்தால் , நாம் அதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என மேலும் தெரிவித்தார்.