செரீனா வில்லியம்ஸ் தனது 27 ஆண்டு கால டென்னிஸ் பயணத்தினை நிறைவு செய்துள்ளாா். ஏற்கனவே தனது வாழ்க்கையில் முக்கியமான பல்வேறு விடயங்களில் கவனம் செலுத்த உள்ளதால் இந்த ஆண்டுக்கான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியுடன் தான் ஓய்வு பெறப் போவதாக செரீனா வில்லியம்ஸ் அறிவித்திருந்தாா்.
இந்தநிலையில் நியூயோர்க் நகரில் நடைபெற்று வருகின்ற கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவில் தோல்வியடைந்த நிலையில் நேற்று நடைபெற்ற ஒற்றையர் பிரிவிலும் தோற்றுள்ளார்.
நேற்றைய போட்டியில் நடைபெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் 3வது சுற்றில் முன்னணி வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் அவுஸ்திரேலியாவின் அஜ்லா டோம்லஜனோவிக்கிடம் 7-5, 6-7, 6-1 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்துள்ளாா் .
இந்தநிலையிலேயே அவா் ஏற்கனவே அறிவித்தபடி தனது 27 ஆண்டு கால டென்னிஸ் பயணத்தை நிறைவு செய்துள்ளார்.
40 வயதான இவர் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் 4 ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களையும் வென்று டென்னிஸ் உலகின் ஜாம்பவானாக வலம் வந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது