இலங்கையில் கடந்த காலங்களில் பதிவான மனித உரிமை மீறல்கள் மீண்டும் இடம்பெறாத வகையில் பொறுப்புக்கூறல் மற்றும் ஆழமான சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இலங்கை அரசியல் ரீதியாக மிகவும் நெருக்கடியான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கத்தை பேணுவதற்கு புதிய அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
அமைப்பு ரீதியாகவும் பாதுகாப்பு ரீதியாகவும் சீர்திருத்தங்களுக்கு நாடு உடனடியாக திரும்ப வேண்டுமெனவும், பொருளாதார நெருக்கடி அனைத்து தரப்பு மக்களின் மனித உரிமைகளிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கொடூரமான பாதுகாப்புச் சட்டங்களை பின்பற்றுதல் மற்றும் அமைதியான போராட்டங்களை ஒடுக்குதல் என்பன உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் மனித உரிமைகளுக்கான ஐ.நா அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் மாணவர் செயற்பாட்டாளர்களை கைது செய்வதுடன், பொதுமக்களின் போராட்டங்களை நசுக்குவதற்கு அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பட்டுள்ளது.