பிரித்தானிய மஹாராணியின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் கவலை அடைந்ததை அடுத்து பால்மோரலில் மருத்துவக் கண்காணிப்பில் அவர் இருப்பதாக பக்கிங்காம் அரண்மனை தெரிவித்துள்ளது.
இன்று காலையில் கூடுதலான பரிசோதனை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மாட்சிமை வாய்ந்த அரசியின் உடல்நிலை குறித்து கவலை கொண்ட அவரது மருத்துவர்கள், தொடர்ந்து அவர் மருத்துவ கண்காணிப்பில் இருக்குமாறு பரிந்துரைத்துள்ளனர் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசி பால்மோரல் கோட்டையில் செளகர்யமாக இருக்கிறார், என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
96 வயதாகும் பிரித்தானிய மஹாராணி, புதன்கிழமை காணொளி வாயிலாக நடந்த பிரைவி கவுன்சில் கூட்டத்தில் இருந்து வெளியேறிய பிறகு, மருத்துவர்கள் அவரை ஓய்வெடுக்க அறிவுறுத்தினர். இதையடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இளவரசர் சார்ல்ஸ் பால்மோரல் கோர்ன்வால் சீமாட்டியான தமது மனைவியுடன் அங்கு புறப்பட்டுள்ளார்.
யோர்க் கோமகனும் வெஸ்ஸெக்ஸ் சீமாட்டியும் அபெர்தீனுக்கு மேற்கே உள்ள ஸ்கொட்டிஷ் பண்ணைக்கு பயணம் செய்து வருகின்றனர்.
ஏற்கெனவே ஸ்காட்லாந்தில் இருக்கும் அரசியின் இளைய மகளான ஏன், அங்கிருந்தபடி நிகழ்வுகளை கவனித்து வருகிறார்.
கேம்ப்ரிட்ஜ் கோமகனும் அங்கு செல்வதாகவும், கேம்ப்ரிட்ஜ் சீமாட்டி தமது பிள்ளைகளின் முதலாவது முழு பாடசாலை ஆரம்ப தினம் என்பதால், வின்சர் கோட்டையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லண்டனில் உள்ள தொண்டு அமைப்பின் நிகழ்ச்சிக்கு செல்லவிருந்த சஸ்ஸெக்ஸ் கோமகனும் சீமாட்டியும் பால்மோரல் நோக்கிப் புறப்பட்டுள்ளதாக அந்த தம்பதியின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ‘அரசி கீழே விழுந்திருக்கலாம்’ போன்ற ஆதாரமற்ற ஊகங்களுக்கு எதிரான எச்சரிக்கைகளும் வந்துள்ளன. கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த நிகழ்ச்சியில் அரசி சொந்த கால்களுடனேயே தோன்றினார். அதில் அவர் புதிதாக பிரதமராக நியமிக்கப்பட்ட லிஸ் டிரஸ்ஸுடன் புன்னகைத்தபடி புகைப்படம் எடுத்துக் கொண்டார்.ஆனால், மூத்த அமைச்சர்கள் பங்கெடுத்த பிரைவி கவுன்சிலின் மெய்நிகர் சந்திப்பு மட்டுமே கடைசி நிமிடத்தில் ரத்து செய்யப்பட்டதை வைத்து, அரசியின் உடல்நிலை பலவீனமானமாகி விட்டதாக தவறுதலாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.