பயங்கரவாதத்தடுப்புச் சட்டத்தை இரத்து செய்யக் கோரி நாடளாவிய ரீதியில் ஊர்திவழிப் போராட்டமாக சென்று கையெழுத்து திரட்டும் நடவடிக்கை யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
மாவிட்டபுரம் கந்தசாமி கோயிலிலிருந்து சிதறு தேங்காய் உடைக்கப்பட்டு இன்றைய தினம் சனிக்கிழமை ஆரம்பமான குறித்த ஊர்திவழிப் போராட்டம் காங்கேசன்துறை தொடக்கம் 25 மாவட்டங்களுக்கும் சென்று அம்பாந்தோட்டையை சென்றடையவுள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியினுடைய வாலிபர் முன்னணியும் சர்வஜன நீதி அமைப்பும் முன்னெடுத்த கையெழுத்து திரட்டும் பிரச்சார நடவடிக்கையின் ஆரம்ப நிகழ்வில் அரசியல் கட்சி பிரதிநிதிகள், தொழிற்சங்க தலைவர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
குறித்த ஊர்திவழிப் போராட்டம் மூலம் மூன்று நாட்களுக்கு யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று கையெழுத்தை சேகரிக்கவுள்ளதுடன் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களுக்கும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.