ஈஸ்டர் தாக்குதல் மூலம் இஸ்லாமிய தீவிரவாதம் நாட்டுக்குள் ஊடுருவி விட்டதான மாஜையை காட்டுவதற்காக கூலிக்கு அமர்த்தப்பட்ட படையினரை இந்த நாட்டின் உளவுத்துறையே பயன்படுத்தியதா என்கிற பாரிய சந்தேகம் தற்போது எழுந்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
பயங்கரவாதத்தடுப்புச் சட்டத்தை இரத்து செய்யக் கோரி நாடளாவிய ரீதியில் ஊர்திவழிப் போராட்டமாக சென்று கையெழுத்து திரட்டும் நடவடிக்கை யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட போதே ரவூப் ஹக்கீம் இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
40 வருடங்களுக்கு மேலாக நீதி நியாயத்தை எதிர்பார்த்து போராடிய அனைத்து தரப்புகளுமே பயங்கரவாத தடை சட்டத்துக்கு எதிராக குரல் கொடுத்துள்ளனர்.
சர்வதேச நாடுகளும் மனித நேய அமைப்புகளும் சட்டத்தை நீக்குவதற்கு அழுத்தங்களை கொடுத்த போதும் அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் எதையும் செய்ததாக இல்லை. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குவது தொடர்பாக அழுத்தங்கள் உருவாகியுள்ள நிலையில் உள்நாட்டில் கடந்த இரண்டு மாதங்களாக ஏற்பட்ட போராட்டங்களுக்கு பின்னர் ஒரு சூழல் உருவாகியுள்ளது.
தற்போதுள்ள அரசாங்கம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களையும் போராட்டத்திற்கு தலைமை தாங்கியவர்களையும் அடக்குவதற்காக பயங்கரவாத தடைச்சட்டத்தை பாவிக்கின்ற நிலைமை உருவாகி உள்ளது. இது அவசரமாக தடுக்கப்பட வேண்டிய விடயமாகும்.ஒவ்வொரு கட்டத்திலும் பயங்கரவாத தடைச் சட்டம் இல்லாமல் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாது என்கிற போலியான கருத்து உருவாக்கப்பட்டு வருகிறது.
அண்மையில் நடந்த ஈஸ்டர் குண்டு தாக்குதலை நியாயப்படுத்துவதற்கும் பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்துகின்றனர். இஸ்லாமிய தீவிரவாதம் நாட்டுக்குள் ஊடுருவி விட்டதான மாஜையை காட்டுவதற்காக கூலிக்கு அமர்த்தப்பட்ட படையினரை இந்த நாட்டின் உளவுத்துறையே பயன்படுத்தியதா என்கிற பாரிய சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.
இவ்வாறான சந்தேகங்களுக்கு தீர்வு கிடைக்காத நிலையில் இதற்காக அப்பாவி இளைஞர்கள் தண்டிக்கப்படுவதும் நிரபராதிகள் கொல்லப்படுவதற்கும் இந்த சட்டம் இந்த சட்டம் வழிகோலுகிறது.
திடீர் மரண விசாரணை இல்லாமல் சடலங்களை கொண்டு சென்று புதைக்கலாம் என்கிற விடயத்தை கூட அவசர காலச் சட்டத்தில் அதற்குரிய ஏற்பாடுகளை புகுத்தி கடந்த காலங்களில் செய்தனர்.
தற்போது எழுந்துள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் மக்கள் எழுச்சியை அடக்குவதற்காக பயங்கரவாத தடைச் சட்டத்தை பாவிக்கின்ற நிலைமை காணப்படுகிறது. அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து செயல்படும்போது
மிக விரைவில் இந்த கொடிய சட்டத்தை நாட்டின் சட்ட புத்தகத்திலிருந்து அகற்றுவதற்கு வாய்ப்பு கிட்டும் – என்றார்