Home இலங்கை வடமாகாண கல்வி அமைச்சுக்கு எதிராக மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

வடமாகாண கல்வி அமைச்சுக்கு எதிராக மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

by admin

தொண்டமானாறு வெளிக்கள நிலையம், வடமாகாண கல்வியமைச்சின் பூரண கட்டுப்பாட்டின் கீழ், சட்டவரையறைகளை மீறாத வகையில், வெளிப்படைத் தன்மையுடன் நடைபெற நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய காரியாலயத்தில் கடந்த வாரம் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளது.

குறித்த முறைப்பாட்டுக்கு  எதிர்வரும் 14.09.2022 திகதிக்குள் விளக்கமளிக்குமாறு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் திரு.கனகராஜ் மின்னஞ்சல் மூலம் வடமாகாண கல்விப் பணிப்பாளருக்கு அறிவித்துள்ளார்.    

ஆசிரியர் சங்கத்தினால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய செய்யப்பட்ட முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

தனியாரிடம் சிக்கியுள்ள குறித்து தொண்டமானாறு வெளிக்கள ஆய்வு நிலையம் வடமாகாண கல்வியமைச்சின் நேரடி கண்காணிப்பில் இயங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தொண்டமானாறு வெளிக்கள நிலையம் – மாணவர்களிடம் பரீட்சை கட்டணமாக, பணம் அறவிடுகின்றது. கட்டணம் செலுத்தாத பாடசாலைகளுக்கு வினாத்தாள்கள் வழங்கமுடியாது எனவும் குறித்த நிறுவனம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

  இவ்வாறான குறித்த நிறுவனத்தின் பரீட்சைகளை வடமாகாணம் தழுவிய ரீதியில் பொதுத் தவணைப் பரீட்சைகளாக நடத்துவது மாணவர்களின் சம உரிமைகளை மீறும் செயற்பாடாகும்.


மாகாணக் கல்வித் திணைக்களங்களுக்கென தர உள்ளீட்டு நிதிகளும், வாண்மைத்துவ செயற்பாடுகளுக்காக, காகிதாதிகள், வளவாளர்களுக்கான ஒதுக்கீடுகள் என்பன  மத்திய கல்வியமைச்சினால் வழங்கப்படுகின்றது. 

இந்நிலையில் – தனியார் நிறுவனம் ஒன்று மாணவர்களிடம் இருந்து நிதி அறவீடு செய்யும் பரீட்சை செயற்பாடுகளுக்கு – வடமாகாண கல்வியமைச்சும், வடமாகாணக் கல்வித் திணைக்களமும் உடந்தையாக செயற்படுவது என்பது இலவச கல்விக் கொள்கைகளை மீறிய செயற்பாடாகும்.

வடமாகாணத்துக்குட்பட்ட 13 கல்வி வலயங்களையும் சேர்ந்த வாண்மைத்துவம் மிக்க ஆசிரியர் ஆளணி காணப்படுகின்ற போதும், குறித்த வினாத்தாள்களை தொடர்ச்சியாக ஒரு சிலர் மட்டுமே தயாரித்து வருகின்றனர். 

இதன் காரணமாக குறித்த பரீட்சைக்கு முன்னதாகவே, குறித்த வினாக்கள் தொடர்பாக, தமது தனியார் கல்வி நிறுனங்களில் வெளிப்படுத்தி பிரபல்யம் தேடிக்கொள்ளும் நிலை காணப்படுகிறது. இதனால், பரீட்சை தொடர்பானதும், மாணவர்கள் பெறும் புள்ளிகள் தொடர்பானதுமான பாரபட்சங்கள் ஏற்படுகின்றன.

பாடசாலை கடமைநேரம் கடந்தும், மாலை 4.15 மணி தாண்டியும் பரீட்சைகள் நடபெறுகின்றது. குறித்த தனியார் பரீட்சை நிறுவனம் பரீட்சைகளுக்காக மாணவர்களிடமிருந்து பணம் அறிவிட்டு வருமானம் பெறுகின்ற போதும், குறித்த தனியார் நிறுவனத்தின் வினாத்தாள்களைத் திருத்துவதற்கு அரச சேவை ஆளணியினராகிய ஆசிரியர்களே பயன்படுத்தப்படுகின்றனர்.

பரீட்சைக் கடமைகளில் ஈடுபடும் மற்றும் குறித்த வினாத்தாள்களை திருத்தும் ஆசிரியர்களுக்கு எவ்விதமான கொடுப்பனவுகளையும் குறித்த நிறுவனம் ஒருபோதும் வழங்குவதில்லை.

வடமாகாண கல்வித் திணைக்களத்துக்குட்பட்ட வாண்மைத்துவம் மிக்க போதிய ஆளணி வளம், பௌதீக வளங்கள் என்பன இருக்கின்றபோதும்,  தனியார் நிறுவனமாகப் பதிவுசெய்யப்பட்டுள்ள தொண்டமனாறு வெளிக்கள நிலையத்தின் வர்த்தக செயற்பாடுகளை அரச பாடசாலைகளில் ஊக்குவிப்பதென்பது முறையற்றதும் சட்டவிரோதமானதுமானதும், ஆசிரிய வளங்களை சமமாக பயன்படுத்த சந்தர்ப்பம் வழங்காத செயற்பாடுகளுமாகும்.

எனவே – தனியார் வியாபார நிறுவனங்களின் எந்தவொரு செயற்பாடுகளையும் வடமாகாண கல்வியமைச்சும், வடமாகாண கல்வித் திணைக்களம் பாடசாலைகளில் ஊக்குவிப்பது தடைசெய்யப்படவேண்டும்.

யாழ்.தொண்டமானாறு வெளிக்கள நிலையமானது மாணவர்களின் வெளிக்கள ஆய்வு நடவடிக்கைகளுக்காக ஆரம்பிக்கப்பட்டு, வடமாகாண கல்வித் திணைக்களத்தின் கீழ், செயற்பட்ட ஒரு நிறுவனமாகும். இக்காலப் பகுதிகளில் தொண்டமானாறு வெளிக்கள நிலையத்தின் காப்பாளராக, பதவி வழியாக வடமாகாண கல்விப் பணிப்பாளர்கள் செயற்பட்டு வந்திருந்தனர்.

ஆனால், தற்போது வடமாகாண கல்வித் திணைக்களத்தின் சட்டதிட்டங்களுக்கும், நிதிப்பிரமாண நடவடிக்கைகளுக்கும், உட்படுத்தப்பட முடியாத வகையிலும் – முறைகேடுகள் தொடர்பான எந்தவொரு கணக்காய்வு நடவடிக்கைகளுக்குக்கும் உட்படுத்த முடியாத வகையிலும் – மாவட்ட செயலகத்தில் வியாபார நிறுவனமாக பதிவு செய்யப்பட்டு, தனியார் நிறுவனமாகவே செயற்பட்டு வருகின்றது.

இந்நிலையில் – வடமாகாண கல்விப் பணிப்பாளர், தனியார் வியாபார நிறுவனம் ஒன்றுக்குக் காப்பாளராக தொடர்ந்தும் செயற்படுவது இலங்கையின் தேசிய கல்விக் கொள்கையை மீறிய, சட்டவிரோதமானதும் அதிகார துஸ்பிரயோகமானதுமான செயற்பாடாகும்.

எனவே குறித்த தொண்டமனாறு வெளிக்கள நிலையம், தனியார் வியாபார நிறுவனப் பதிவுடன் செயற்பட அனுமதிக்க முடியாது. வடமாகாண கல்வித் திணைக்களத்தின் பாகமாகவே செயற்படவேண்டும்.  

வடமாகாண கல்வித் திணைக்களத்தின் கீழ் நேரடியாக செயற்படும்போது, காகிதாதிகள் செலவு என்னும் போர்வையில் மாணவர்களிடமிருந்து பணம் அறவிடும் செயற்பாடு தவிர்க்கப்படும் அதேவேளை, தேவையேற்படும் பட்சத்தில் கணக்காய்வுக்கு உட்படுத்தக் கூடியதாகவும், கட்டமைக்கக்கூடியதாகவும், வெளிப்படைத்தன்மை கொண்டதாகவும் அமையும்..

குறித்த நிறுவனம் வடமாகாண கல்வித் திணைக்களத்தின் கீழ் இயங்காமல், தனியார் நிறுவனமாகவே தொடர்ந்தும் இயங்க அனுமதிப்பதென்பது சட்டவிரோதமானதும், தேசிய கல்விக் கொள்கைக்கு முரணானதும், நிதிப்பிரமாணங்களை மீறிய செயற்பாடாகவும், அமைவதுடன் – ஆசிரியர்களினதும், மாணவர்களினதும் அடிப்படை உரிமைகளில் தாக்கம் செலுத்தும் செயற்பாடாகவும் அமைகிறது.
எனவே மேற்குறித்த விடயம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு பரீட்சைகள் அனைத்தும் வடமாகாண கல்வியமைச்சின் பூரண கட்டுப்பாட்டின் கீழ், சட்டவரையறைகளை மீறாத வகையில், வெளிப்படைத் தன்மையுடன் நடைபெற நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More