இவ்வருடத்தின் இரண்டாவது காலாண்டில் இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி வேகம் 8.4% வீழ்ச்சி கண்டுள்ளதாக தொகைமதிப்பு , புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த காலப்பகுதியில் விவசாயத்துறை 8.4 வீதத்தாலும் கைத்தொழில்துறை 10 வீதத்தாலும் சேவைப் பிரிவு 2.2 வீதத்தாலும் வீழ்ச்சி கண்டுள்ளதாக திணைக்களம் வௌியிட்டுள்ள தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மின்சக்தி, எரிசக்தி, உரம், கிருமிநாசினி தட்டுப்பாடு, எரிபொருள் விநியோகம் தொடர்பிலான பிரச்சினை, சீமெந்து, மூலப்பொருட்களுக்கான தட்டுப்பாடு மற்றும் விலை அதிகரிப்பு என்பன பொருளாதார வீழ்ச்சிக்கு பிரதான காரணம் என அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பொருட்களை போக்குவரத்து செய்வதில் உள்ள இடையூறுகள், பண வீக்கத்தினால் அத்தியாவசியப் பொருட்களுக்கான கேள்வி குறைவடைந்தமை என்பன இரண்டாம் காலாண்டில் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதில் பாரிய தாக்கம் செலுத்தியுள்ளதாகவும் தொகைமதிப்பு புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த காலாண்டில் தானிய வகைகள் 32.3 வீதத்தாலும் தேயிலை உற்பத்தி 19.7 வீதத்தாலும் நெல் உற்பத்தி 15.6 வீதத்தாலும் கடற்றொழில் 15.3 வீதத்தாலும் பொருள்சார் உற்பத்தி 13.6 வீதத்தாலும் மரக்கறி உற்பத்தி 13.2 வீதத்தாலும் வீழ்ச்சி கண்டுள்ளதாக திணைக்களத்தின் தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.