தியாக தீபம் திலீபன் யாழ்.மாநகர சபைக்கு மாத்திரம் சொந்தமானவர் அல்ல. ஒட்டு மொத்த தமிழ் மக்களின் அடையாளம். அவரை நாம் மாநகர சபைக்குள் முடக்கவில்லை என யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்தார்.
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளை பொதுக் கட்டமைப்பொன்றினை உருவாக்கி முன்னெடுத்து செல்வதற்கான கலந்துரையாடல் யாழில் நடைபெற்றது.
யாழ்ப்பாணம் நாவலர் மண்டபத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை மாலை 3 மணியளவில் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில் சமயத் தலைவர்கள் , அரசியல் கட்சி தலைவர்கள் , நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொது அமைப்புக்களை சார்ந்தோர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், கலந்துரையாடலில் கட்சி பேதங்கள் , தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களை கலைந்து அனைத்து தரப்பினர்களும் கலந்து கொண்டு பொதுக்கட்டமைப்பை உருவாக்க முன்வர வேண்டும் என யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் கோரிக்கையை அடுத்து பல தரப்பினரும் கலந்து கொண்டனர்.
குறித்த கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும் போதே முதல்வர் அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் கட்டமைப்பை யாழ். மாநகர சபைக்குள் மட்டுப்படுத்த மாட்டோம். பொதுக் கட்டமைப்பு என்பது பொதுவான ஒரு அமைப்பாகவே உருவாக்கவே இந்த கலந்துரையாடலை ஏற்பாடு செய்துள்ளோம். இதற்கும் மாநகர சபைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றார்.
குறித்த கலந்துரையாடலில் அரசியல் விமர்சகரும், யாழ். பல்கலைகழக அரசியல்துறை பேராசிரியர் கலாநிதி கே.ரி. கணேசலிங்கம் தெரிவிக்கையில்,
இந்த பொதுக் கட்டமைப்பு அரசியலுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். தமது அரசியலுக்கு இந்த கட்டமைப்பை எவரும் பயன்படுத்தக் கூடாது. இதுவொரு நினைவேந்தல் கட்டமைப்பாக இருக்க வேண்டும்.
இந்த கட்டமைப்புக்குள் அரசியல் புகுந்து கொண்டால், அரசியலுக்காக இந்த கட்டமைப்பை எவரேனும் பயன்படுத்த முனைந்தால் இதில் இருந்து நான் உடனடியாக வெளியேறி்செல்வேன் என தெரிவித்தார்.
வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் தெரிவிக்கையில்,
கடந்த 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் நினைவேந்தலை யார் செய்வது என்ற பிரச்சனை ஏற்படவில்லை. அதன் பின்னர் நினைவேந்தல் நிகழ்வுகளில் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதற்கு காரணம் யார் பெயர் எடுப்பது என்பது தான் காரணம்.
எனவே நினைவேந்தல் நிகழ்வுகள் பொதுக்கட்டமைப்பின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட வேண்டும். அந்த பொதுக்கட்டமைப்பானது அரசியல் கட்சி சார்ந்ததாகவோ அரசியல்வாதிகள் சார்ந்தோர் இல்லாமல் இருக்க வேண்டும்.
மாவீரர்களின் பெற்றோர்கள், பொது அமைப்பின் பிரதிநிதிகளை முன்னுறுத்தி பொதுக்கட்டமைப்பினை உருவாக்குவோம். பின்னணியில் நாம் அரசியல்வாதிகள் அவர்களுக்கு உறுதுணையாக, பாதுகாப்பாக இருப்போம் என்றார்.
வடமாகாண சபையின் முன்னாள் அமைச்சர் பொ. ஐங்கரநேசன் தெரிவிக்கையில்,
இந்த பொதுக்கட்டமைப்பு முழுமையான பொதுக்கட்டமைப்பாக உருவாக வேண்டும் ஆயின், வடக்கு கிழக்கின் பிரதிநிதிகளை உள்ளடக்கி இக் கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.நினைவேந்தல் நிகழ்வுகளில் தங்களை முன்னிலைப்படுத்தவில்லை என எவரும் விலகி இருக்க முடியாது.
ஆரம்ப நிகழ்வில் நான் குறித்த நேரத்திற்கு நினைவிடம் செல்லவில்லை. அதற்கு காரணம் முதல் நாட்களில் விரும்பத்தகாத செயல்கள் நினைவிடத்தில் இடம்பெற்றதாக ஊடகங்களில் வெளிவந்த செய்திகள் நிகழ்வுகள் ஆரம்பமாகி ஒரு மணிநேரம் கழித்தே சென்றேன். இனிவரும் காலங்களில் இவ்வாறான நிலைகள் இடம்பெறாதவாறு இருக்க வேண்டும் என்றார்.