காலமான பிாித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் பல நாட்களாக பொது மக்கள் அஞ்சலிக்காக பார்வைக்கு வைக்கப்பட்ட நிலையில், இன்று திங்கள்கிழமை அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச் சடங்கு நடைபெறுகின்றது. லண்டன் நேரப்படி இன்று காலை 11 மணியளவில் இறுதிச் சடங்கு நடைபெறும்.
காலையில் தனது இறுதிப் பயணத்தை தொடங்கும் மகாராணியின் உடல் முதலில் வெஸ்ட்மின்ஸ்டர் அபே கொண்டு செல்லப்பட்டு அங்கே ஆயிரக் கணக்கானோர் முன்னிலையில் பிராா்த்தனை நடைபெறும்.
அதன்பின்னா் விண்ட்சர் கோட்டைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கே கல்லறை ஜெபம் நடைபெற்ற பின்னா் நெருக்கமானவர்கள் முன்னிலையில் அடக்கம் நடைபெறும்.
60 ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சேர்ச்சில் மறைந்தபோது நடைபெற்ற அரசு மரியாதையுடன் கூறிய இறுதிச் சடங்கு நிகழ்வுக்குப் பின்னா் மிகுந்த உணர்ச்சியும், விமர்சையும், சம்பிரதாயங்களும் நிறைந்த இறுதிச் சடங்காக இது அமைந்திருக்கும்.
இன்று நடைபெற உள்ள மகாராணியின் இறுதிச்சடங்கில் உலக தலைவர்கள் உள்பட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட முக்கிய நபர்கள் கலந்து கொள்வார்கள் எனவும், 7 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேல் பொதுமக்கள் பங்கேற்பார்கள் எனவும்எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் மகாராணியின் இறுதிச்சடங்கினை பிாித்தானியா முழுவதும் சுமார் 125 திரையிரங்குகளில் ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
இதேவேளை இறுதிச் சடங்கு நிகழ்வில் கூடுதலாக செய்யவேண்டிய திட்டங்கள் சிலதை மகாராணியே குறிப்பிட்டுச் சென்றுள்ளார் என பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.