யாழ் மாவட்டத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் உயிரிழப்பு தொடர்பிலும் அதனை கையாள்வது தொடர்பிலும் கலந்துரையாடலொன்று இன்றையதினம் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இடம் பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகாரசபை உத்தியோகத்தர்கள், வைத்தியர்கள், சிறைச்சாலை அதிகாரிகள், காவல்துறை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தற்போதைய நிலையில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி வைத்தியசாலையில் பல உயிரிழப்புக்கள் இடம்பெற்று வருவதாகவும் இதனை பொலிசார் மற்றும் பெற்றோர் சமூகத்தில் உள்ளவர்கள் கட்டுப்படுத்த வேண்டும் என போதன வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
மேலும் பாடசாலை மாணவர்களிடையே குறித்த போதைப்பொருள் பாவனை அதிகம் காணப்படுவதால் பாடசாலை அதிபர்கள், வலய கல்வி பணிப்பாளர்கள் உள்ளிட்டோர் மாணவர் தொடர்பில் அக்கறை செலுத்த வேண்டும்.எதிர்வரும் காலங்களில் பாடசாலைகள் ஊடாக பல விழிப்புணர்வு வேலைத்திட்டங்களை மேற்கொண்டு அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
போதைப்பொருளால் பாதிக்கப்படும் ஒருவருக்கு சிகிச்சை அளிப்பதற்கு பல இலட்சம் ரூபாய் தேவைப்படுவதாலும் வைத்தியசாலையில் மருந்துக்குப் பாரிய தட்டுப்பாடு நிலவுவதாலும் இவ்வாறான போதைப்பொருள் பாவனையால் பாதிக்கப்படுபவர்களை வைத்தியசாலையில் வைத்து சிகிச்சை அளிப்பதை விட போதைப்பொருள் பாவனையை தடுப்பதற்கு நாங்கள் வேலை செய்ய வேண்டும் என்றார்.