சீனாவில் ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சா் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் நீதித்துறை அமைச்சா் பு ஜெங்குவா (வயது 67) என்பவா் ஊழல் மூலம் 17.3 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள பணம் பெற்றார் எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு மரண தண்டனை தீா்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பு ஜெங்குவா தனது பதவியை, அதிகாரத்தை தவறான முறையில் பயன்படுத்தி, பலரது தொழில், வணிக நடவடிக்கைகள், உத்தியோக நிலைகள், சட்ட வழக்குகள் போன்றவற்றுக்கு உதவி செய்து , அதற்காக ஆதாயங்கள் பெற்றார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது
இது தொடர்பான வழக்கு சாங்சூன் நகர இடைநிலை மக்கள் நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில் விசாரணை முடிவில் பு ஜெங்குவா மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக தொிவித்துள்ள நீதிமன்றம் நேற்று அவருக்கு 2 ஆண்டு கால அவகாசத்துடன் கூடிய மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
சீனாவில் 2012-ம் ஆண்டு, ஜின்பிங் ஜனாதிபதியாக பதவி ஏற்றது முதல், ஊழலை கடுமையாக ஒடுக்கி வருகிறார். அவரது பதவிக்காலத்தில் இதுவரை சீன கம்யூனிஸ்டு கட்சியைச் சோ்ந்த 10 லட்சத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் சீன ராணுவத்தின் பலஅதிகாரிகள் ஊழல் வழக்குகளில் தண்டிக்கப்பட்டுள்ளனர்.
ஜின்பிங் பதவிக்கு வந்து 10 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்க உள்ள சீன கம்யூனிஸ்டு கட்சியின் மாநாடு அடுத்த மாதம் 16-ந் திகதி பீஜிங்கில் நடைபெற உள்ளது. அதில் ஜின்பிங் பதவிக்காலம் மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.