சிரியாவில் அகதிகள் படகு ஒன்று கடலில் மூழ்கியதில் 77 பேர் உயிரிழந்துள்ளனா். கடந்த செவ்வாய்க்கிழமை லெபனானில் இருந்து சிரியாவிற்கு நூறுக்கும் மேற்பட்ட அகதிகளுடன் புறப்பட்ட படகு சிரியாவின் கடற்கரை நகரமான டார்டவுஸ் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
அந்த படகில் சிரியா, லெபனான் மற்றும் பலஸ்தீனிய நாட்டை சேர்ந்தவர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சிரியா கடலோர காவல் படையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனா். எனினும் பெண்கள், சிறுவர்கள் உள்பட 77 பேர் உயிரிழந்துள்ளதாக சிரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 20 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது
லெபனானில் நாணயமதிப்பு 90% க்கும் கீழ் குறைந்ததால் பல்லாயிரக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர், இதனால் அந்த நாட்டின் மக்கள் தொகையில் 80 சதவீதத்தினர் உணவு மற்றும் மருந்துப்பொருட்கள் வாங்க முடியாமல் சிரமப்பட்டு வரும் நிலையில் அண்டை நாடுகளில் அவர்கள் தஞ்சம் அடைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது